பாட்னா:

பீகாரில் அமைந்துள்ள மெகா கூட்டணியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும்,இதர கூட்டணி கட்சிகள் 11 தொகுதிகளிலும் போட்டியிடுவது என உடன்பாடு ஏற்பட்டுள்ளது.


இந்த உடன்பாட்டின் அடிப்படையில், ஆர்எல்எஸ்பி கட்சிக்கு 5 தொகுதிகளும், ஹெச்ஏஎம் கட்சிக்கு 3 தொகுதிகளும், விஐபி கட்சிக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிக்கு தனது 20 தொகுதிகளிலிருந்து ஒரு தொகுதியை ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒதுக்கியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. அதேபோல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கனையா குமாரிக்கும் இந்த கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்படவில்லை.

கடந்த 2014 தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 31 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தனித்துப் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் 1 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் 4 தொகுதிகளையும், காங்கிரஸ் 2 தொகுதிகளையும்,தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியையும் கைப்பற்றின. பின்னர் தேசியவாத காங்கிரஸ் எம்பி தாரிக் அன்வர் காங்கிரஸில் சேர்ந்தார்.