திரிசூர்: கேரளாவில் வசிக்கும் விருதுபெற்ற கல்வியாளரான, இந்தாண்டு தனது 100வது வயதில் அடியெடுத்து வைக்கும் சித்ரன் நம்பூதிரிபாட் என்ற முதியவர், தொடர்ந்து 29 ஆண்டுகளாக இமயமலைக்கு புனித யாத்திரை சென்று வருகிறார்.
இதுகுறித்து கூறப்படுவதாவது; தனது சிறுவயதில், பக்கத்து வீட்டு முதியவரின் மூலம் இமயமலை குறித்து கேட்டறிந்த சித்ரன், பின்னாளில் அந்த இடத்திற்கு தொடர்ச்சியாக ஆண்டுதவறாமல் சென்றுவருவோம் என அப்போது நினைக்கவில்லை.
தனது 71வது வயதில், 1990ம் ஆண்டு இமயமலைக்கு முதல் பயணம் மேற்கொண்ட சித்ரன், ஒரு ஆண்டுகூட தவறாமல், தொடர்ச்சியாக 29 ஆண்டுகள் பத்ரிநாத் மற்றும் கேதர்நாத் உள்ளிட்ட இடங்களுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் இவர் மேற்கொள்ளவுள்ள பயணம் தொடர்ச்சியான 30ம் ஆண்டு பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில், இவர் தனது 100வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் என்பதும் மற்றொரு முக்கிய சுவாரஸ்ய அம்சமாகும்.
“இந்தாண்டு புனிதப் பயணம் செல்வதற்குள், நான் நோய்வாய்ப்படாமல் இருக்க வேண்டுமே!” என்கிறார் சித்ரன் நம்பூதிரிபாட்.
– மதுரை மாயாண்டி