ஸ்ரீநகர்
ஒற்றுமையுடன் இருந்தால் காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வெல்லும் என தேசிய மாநாட்டுக் கட்சி ஃபரூக் அப்துல்லா கூறி உள்ளார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியுடன் பல மாநிலக் கட்சிகள் கூட்டணி அமைத்து வருகின்றன. தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. அதை போல் கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது.
தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் காஷ்மீர் மாநில மூத்த அர்சியல்வாதியுமான ஃபரூக் அப்துல்லா, “நமது இரு கட்சிகளும் இணைந்துள்ளது மகிழ்ச்சிக்குரியது. நாம் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். காங்கிரஸ் வெற்றி பெற்றால் அது நமது கட்சியின் வெற்றி ஆகும்.
அத்துடன் காங்கிரசின் வெற்றி என்பது எனக்கும் உங்களுக்கும் மட்டுமின்றி நாடு முழுமைக்குமே நல்லதாகும். நாம் இப்போது நாட்டின் ஒற்றுமை, நன்மை மற்றும் எதிர்காலத்துக்காக ஒன்றிணைந்துள்ளோம் என்பதை என்றும் மறக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.