டில்லி
பொருளாதார குற்றவாளியான நிரவ் மோடி தப்பி ஓட நிதி அமைச்சகம் உதவி உள்ளதாக பாஜக தலைவர் சுப்ரமணியன் சாமி கூறி உள்ளார்.
பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி வங்கிகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு நாட்டை விட்டு பங்குதாரர் மற்றும் குடும்பத்துடன் ஓடி விட்டார். அவரை கொண்டு வர இந்திய அரசு முயன்று வருகிறது. இந்நிலையில் நிரவ் மோடி லண்டனில் வசதியாக வாழ்வதாக செய்திகள் வெளியாகின. அவர் ஏற்கனவே தேடப்படும் குற்றவாளி என இண்டர்போல் அறிவித்துள்ளது.
நிரவ் மோடியை லண்டன் நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறை கைது செய்துள்ளது. அத்துடன் அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. நிரவ் மோடியின் கைது குறித்து இந்திய எதிர்க்கட்சி தலைவர்கள் இது தேர்தல் வித்தை என விமர்சித்து வருகின்ற்னர். இது குறித்து பாஜக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரமணியன் சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
சுப்ரமணியன் சாமி, “நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வர பிரதமர் அலுவலகம் மற்றும் மோடி அரசு அதிகாரிகள் மிகவும் ஆர்வமுடன் உள்ளனர். ஆனால் இதில் தாமதம் ஏற்பட்டதற்கு நிதி அமைச்சகம் தான் காரணம். அவர்களுக்கு இதற்காக தங்க கட்டிகள் கிடைத்துள்ளன. நிரவ் மோடியால் நிதி அமைச்சக உதவி இன்றி தப்பி இருக்க முடியாது. நிரவ் மோடி தப்பியதற்கு பொறுப்பானவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.