அகர்தலா
அருணாசலப் பிரதேசம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்ட பலர் பாஜகவில் இருந்து விலகி உள்ளனர்.
தற்போது அருணாசலப் பிரதேச மாநிலத்தில் தேர்தலில் போட்டியிட சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்ட பலர் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அதில் பலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இவர்களில் சுமார் 20 பேர் பாஜகவில் இருந்து விலகி உள்ளனர். அவர்களில் 8 சட்டபேரவை உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்த 20 பேரும் முன்னாள் பாஜக அமைச்சர்கள் ஜார்கர் காம்லின் மற்றும் குமார் வால் ஆகியோர் தலைமையில் தேசிய மக்கள் கட்சியில் இணைந்துள்ளனர். தேசிய மக்கள் கட்சி மேகாலயா மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ளது. அந்த கட்சி தலைவர் கன்ராட் கே சங்மா மேகாலயா மாநில முதல்வராக உள்ளார். அத்துடன் வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவுடன் இந்த கட்சி கூட்டணி அமைத்துள்ளது.
திரிபுரா மாநிலத்தில் பாஜக முன்னாள் துணைத் தலைவர் சுகால் பவுமிக் மற்றும் இரு மூத்த தலைவர்களான பிரகாஷ் தாஸ் மற்றும் தபாசிஷ் சென் ஆகியோர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளனர். இவர்களில் பவுமிக் மற்றும் தாஸ் ஆகிய இருவரும் காங்கிரசில் இருந்து விலகி கடந்த 2015 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தவர்கள் ஆவார்கள்.
இவர்களை தாய்க்கட்சிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பிரத்யோத் பிக்ராம் வரவேற்றுள்ளார். மேற்கு திரிபுரா தொகுதிக்கு பவுமிக் வேட்பாளராக அறிவிக்கபட உள்ளார் என கூறப்படுகிறது.