டில்லி
இந்திய ரெயில்வேயில் உதவியாளர் வேலைக்கு 82 லட்சம் பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
ரெயில்வே வேலை வாய்ப்பு வாரியம் சமீபத்தில் குரூப் டி வேலைகளுக்காக ஆட்கள் தேவை என விளம்பரம் அளித்திருந்தது. மொத்தம் 62,907 பேரை சேர்க்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த உதவியாளர் வேலை என்பது ரெயில்வேயில் மிகவும் அடித்தள மட்ட பணியாகும். இதில் ரெயில்வே கேட்மேன், தொழிலக உதவியாளர், அலுவலக உத்வியாளர், டிராக்மேன், லைன்மேன் உள்ளிட்ட பணிகள் அடங்கும்.
இந்த பணிகளுக்கு குறைந்த பட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுபு தேர்ச்சி ஆகும். அத்துடன் ஐடிஐ பட்டயம் இருப்பது கூடுதல் தகுதி ஆகும். இந்த பணிக்கு சுமார் 2கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் சுமார் 82 லட்சம் பேர் பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் ஆவார்கள். இவர்களில் கலை, பொறியியல், விஞ்ஞானம் என பல துறைகளில் பட்டப்படிப்பு படித்தோரும் உள்ளனர்.
பொறியியல் துறையில் இளங்கலை படிப்பு படித்தோர் 4,19,137 பேரும் முதுகலை பட்டம் பெற்றோர் 40,751 பேரும் விண்ணப்பித்துள்ளனர். கலைப் பிரிவுகளில் இளம்கலை பட்டப்படிப்பு படித்துள்ள 19.1 லட்சம் பேரும் முதுகலை படிப்பு முடித்த 3.83 லட்சம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களைத் தவிர விஞ்ஞான இளம் கலை பட்டதாரிகள் 9.57 லட்சம் பேரும் விஞ்ஞான முதுகலை பட்டதாரிகள் 1.28 லட்சம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.