சென்னை:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அதிமுக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில், திருவண்ணா மலை தொகுதிக்கு முன்னாள் கலசப்பாக்கம் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், அவருக்கு வழங்கப் பட்ட அமைச்சர் பதவி உள்பட கட்சி பதவிகளையும் பிடுங்கி நடவடிக்கை எடுத்தவர் முன்னாள் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. ஆனால், அவருக்கு தற்போதைய அதிமுக தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் அதிப்தியை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த எலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி, இவர் கோயம்பத்தூர் விவசாய கல்லூரியில் பி.எஸ்.சி அக்ரி படித்திருந்ததால், அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்றே அழைக்கப்பட்டார். முன்னதாக இவர்  வேளாண்மைத்துறையில் ஏ.ஓவாக பணியாற்றி உள்ளார்.

எம்.ஜி.ஆர் இறந்தபோது அதிமுக ஜெ, ஜா என இரண்டாக பிரிந்தது. அப்போது  ஜெயலலிதாவுக்கு தோள் கொடுத்ததில் இவரும் ஒருவர். இதன் காரணமாக அப்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். பின்னர் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று கவுன்சிலானார்.  தொடர்ந்து 2001 முதல் 2006 வரை கலசப்பாக்கம் ஒன்றிய சேர்மனாக இருந்தார்.

பின்னர் 2006ம் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  2011ல் அதிமுக ஆட்சி அமைந்தபோது ஜெயலலிதா இவருக்கு  உணவுத்துறை அமைச்சர் பதவி வழங்கி அழகு பார்த்தார். ஆனால், அவரது பணி சிறப்பாக இல்லாததால், பின்னர்  பள்ளிக் கல்வித்துறை, வணிகவரித்துறை அமைச்சர் என வேறு வேறு துறைகளுக்கு மாற்றப் பட்டார். அதிலும் அவரது செயல்பாடு திருப்தி அளிக்காமல்  ஏராளமான புகார்கள் எழுந்த நிலையில்,  கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவி, மாவட்ட செயலாளர் பதவிகள் பறித்தார் ஜெ. பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து அக்ரிக்கு மீண்டும் வேளாண்மைத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

முத்துகுமாரசாமி – அக்ரி கிருஷ்ணசாமி

ஆனால், அப்போதும் தனது பணியை சரிவர செய்யாமல்,   தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியை டார்ச்சர் செய்தால், அவர் ரயில் முன் பாய்ந்து  தற்கொலை செய்து கொண்டார். இதன் காரணமாக அக்ரி  கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவி கடந்த 2015ம் ஆண்டு மீண்டும் பறிக்கப் பட்டது. அவரது அரசியல் வாழ்க்கையும் அஸ்தமனம் அடைந்தது. ஜெயலலிதா அவரை ஓரங்கட்டியே வைத்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை – சேலம் இடையே 278 கிலோ மீட்டர் தூரம் பசுமை வழிச்சாலை அமைக்கும் விவகாரத்திலும் மத்திய மாநில அரசுகளுக்கு ஆதரவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி செயல்பட்டு வந்ததாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதிமுகவினரும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எந்தவொரு மக்கள் நலப்பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை என்று குற்றம் சாட்டி உள்ளனர். அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு பதிலாக வேறு வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கி உள்ளனர்

மேலும், 8 வழிச்சாலை விவகாரத்தால் மாநில அரசுமீது அந்த பகுதி மக்கள் கடும் கோபத்தில் இருப்பதால் அக்ரியின் வெற்றி கேள்விக்குறியாகி உள்ளது.

சென்னை – சேலம் எட்டுவழிச் சாலையானது  காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் உள்பட 5 மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள், கிராமங்கள் வழியாக அமைக்கப்படுகிறது. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக மத்திய மாநில அரசுகள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், திருவண்ணாமலை தொகுதியில் அதிமுக  வேட்பாளராக அக்ரி கிருஷ்ண மூர்த்தியை அறிவித்திருப்பது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, 8 வழிச்சாலை திட்டம் உள்பட பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கை காரணமாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மத்திய பாஜக அரசு மற்றும் தமிழக அரசு மீது கடும் கோபத்தில் உள்ள நிலையில், அக்ரியை அதிமுக வேட்பாளராக நிறுத்தி இருப்பது, மாவட்ட அதிமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமையினர், விவசாயிகள் அதிகம் வசிக்கும் திருவண்ணாமலை தொகுதியில் அக்ரி கிருஷ்ண மூர்த்தி ஜெயிக்க சான்சே இல்லை என்று அதிமுகவினர் குமுறி வருகின்றனர்.

அதேவேளையில், 8 வழிச்சாலை திட்டம் போன்ற மக்கள் நல பணிகளுக்காக களத்தில் இறங்கி போராட்டம் நடத்திய  சி என் அண்ணாதுரையை திமுக வேட்பாளராக அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவர் வெற்றி பெறுவது உறுதி என்று திமுகவினர் மட்டுமல்லாது அதிமுகவினரும் புலம்பி வருகின்றனர்.