மும்பை

மூக வலைதளங்களில் வெளியாகும் அரசியல் விளம்பரங்களை ஆய்வு செய்து புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அமைக்க உள்ளது.

தற்போது மக்களிடையே சமூக வலை தளங்களான முகநூல், டிவிட்டர் உள்ளிட்டவைகளின் தாக்கம் அதிகம் உள்ளது. நடைபெற உள்ள மக்களவை தேர்தலை ஒட்டி இந்த சமூக வலை தளங்களில் அரசியல் விளம்பரங்கள் அதிகம் வெளிவந்துக் கொண்டுள்ளன. இவற்றை ஒழுங்கு படுத்தவும் தேர்தலுக்கு 48 மணி நேரம் முன்பு விளம்பரங்களை தடை செய்யவும் கோரி பொது நல வழக்கு ஒன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நரேஷ் பாடில் மற்றும் நீதிபதி நிதின் ஜாம்தார் ஆகியோரின் அமர்வு விசாரித்து வருகிறது. அப்போது வழக்கு தொடர்ந்தவர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் அபினவ் சந்திரசூட் முகநூல் மற்றும் கூகுளில் சர்வதேச அரசியல் விளம்பர கட்டுப்பாடு விதிகள் உள்ளதாகவும் இந்தியாவில் டிவிட்டரிலும் அதைப் போல கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நீதிமன்ற அமர்வு, “அரசியல் விளம்பரங்களை முகநூல், டிவிட்டர், கூகுள் இந்தியா மற்றுமுள்ள சமூக வலை தளங்களில் வெளியிட தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அத்துடன் அந்த விளம்பரங்களை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து அனுமதி அளித்த பிறகே வெளியிட வேண்டும். எனக் கூறியது.

இதற்கு தேர்தல் ஆணைய வழக்கறிஞர் பிரதீப் ராஜகோபால், “தேர்தல் விளம்பரங்கள் குறித்து ஏற்கனவே ஆணயம் ஆய்வு நடத்த தேவையான விதிகளை அமைத்துள்ளது. தற்போதுள்ள விளம்பரங்களில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. விதிமுறைகளை மீறும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படும்” என தெரிவித்துளார்.