டில்லி:
அரசியல் கட்சிகள், தங்களது தேர்தல் அறிக்கைகளை வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பே வெளியிட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
நாடு முழுவதும், மக்களவை மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளில் தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறது. தேர்தல் தொடர்பாக தேர்தல் குறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை ஆகியவற்றை செய்து வருகிறது.
இந்த நிலையில்,தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் அறிக்கை தொடர்பாக கடிதம் அனுப்பி உள்ளது.
அதில், கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வாக்குப்பதிவு நேரம் தொடங்குவதற்கு 48 மணி நேரத்துக்குள் தேர்தல் அறிக்கை வெளியிடக் கூடாது என தெரிவித்துள்ளது. ஒவ்வொரு கட்ட தேர்தல் தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுக் கொள்ளலாம், அதன்பிறகு வெளியிடக்கூடாது என்று அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வாக்குப்பதிவின்போது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களை திசைதிருப்பும் முயற்சியில் இருந்து தடுக்கும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், முதல்கட்ட வாக்குப்பதிவு நாளின் போது பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அது வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி, காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.