ரியாத்: புதிதாகப் பிறந்த குழந்தையை விமான நிலையத்திலேயே மறந்து விட்டுவிட்டு, விமானம் வானத்தில் ஏறிய பின்னர் சுதாரித்த தாயால், விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.
சவூதி அரேபியாவின் ஜெட்டா சர்வதேச விமான நிலையத்தில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது.
பொதுவாக பயணம் செய்யும் நபர்கள், தாங்கள் கொண்டுசெல்லும் பொருட்களில் ஏதோ ஒன்றை பல சமயங்களில் தவறவிட்டுவிடுவதுண்டு. விமான நிலையங்களில் இப்படி தவறவிட்டுவிட்டு, விமானம் புறப்பட்டுவிட்டால், அந்தப் பொருட்களை திரும்ப எடுப்பதற்காகவெல்லாம் விமானங்கள் திரும்பி வந்து தரையிறங்குவதில்லை.
ஆனால், விமானப் பயணம் செய்யும் ஒரு தாய், தனது பச்சிளம் குழந்தையை விமான நிலையத்திலேயே தவறவிட்டுவிட்டு, விமானம் ஏறி, விமானமும் புறப்பட்டுவிட்டால்?
அப்படியான சம்பவம்தான் சவூதியின் ஜெட்டா சர்வதேச விமான நிலையத்தில் நடந்துள்ளது. ஜெட்டாவிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் புறப்பட்ட SV832 என்ற எண்ணுடைய விமானம், வானத்தில் ஏறிய பின்னர், அதிலிருந்த ஒரு தாய், தன் குழந்தையை விமான நிலையத்திலேயே தவறவிட்டுவிட்டதை உணர்ந்து பதறினார்.
உடனே, பைலட் அறைக்கு தகவல்போய், விமானம் மீண்டும் திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம், அங்கே பரபரப்பை ஏற்படுத்தியது.
– மதுரை மாயாண்டி