ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், பாரிவேந்தரின் ஐ.ஜே.கே .வைகோவின் ம.தி.மு.க.போன்ற கட்சிகளை தவிர அனைத்து கட்சிகளுமே –தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சிகாரர்களிடம் நேர்காணல் நடத்தி கொண்டிருக்கின்றன.
பிரதான கட்சிகளை விட்டுத்தள்ளுங்கள்.நோட்டாவுக்கு நிகராக வாக்கு வங்கியை வைத்துள்ள உதிரி கட்சிகளும் நேர்காணல் எனும் கண்துடைப்பு நாடகத்தை நடத்தி-ஊடகங்கள் மூலம் வேடிக்கை காட்டுகின்றன.
பிரதான கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஏற்கனவே தேர்வு செய்து விட்டன. இருந்தும் நேரம் போகாமல் ஒரு நேர்காணல்.
தூத்துக்குடி,தேனி,வேலூர், மத்திய சென்னை,தென் சென்னை உள்ளிட்ட பல தொகுதிகளில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.சார்பில் யார் நிற்க போகிறார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. எனினும் நேர்காணல் எனும் சடங்குகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
நேர்காணலில் என்ன நடக்கிறது?
அ.தி.மு.க.நேர்காணல் சின்ன உதாரணம்.
‘மினிஸ்டர் வொய்ட்’ வேட்டி-சட்டை அணிந்து நேர்காணல் அறைக்குள் நுழைகிறார்- பி.ரவீந்திர நாத் குமார். தந்தை ஓ.பி.எஸ்.வைத்த கண் வாங்காமல் மகனை பார்க்கிறார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வணங்கி பூங்கொத்து கொடுத்து, தேனி தொகுதியில் கட்சி வளர்ச்சிக்கு செய்த சாதனைகள் அடங்கிய குறிப்பை அளிக்கிறார்- குமார்.
பின்னர் நேர்காணல் ஆரம்பம்:
எடப்பாடி:எப்போது கட்சியில் உறுப்பினராக சேர்ந்தீர்கள்?
ரவீந்திரநாத்:கடந்த 21 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன்.இப்போது தேனி மாவட்ட அம்மா பேரவை செயலாளர்.
எடப்பாடி:கட்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?
ரவீந்திரநாத்: கட்சிக்கு 1 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளேன்.கடந்த 2011 ஆம் ஆண்டு கட்சி நிதியாக அம்மாவிடம் ரூ.50 லட்சம் வழங்கி இருக்கிறேன்.
இப்படி போகிறது நேர்காணல்.
சில தொகுதி ஆட்கள் ‘’தொகுதியை தயவு செய்து கூட்டணிக்கு கொடுத்துடாதீங்க’’ என்று புலம்புவதையும் கேட்க முடிகிறது.
கோவை தொகுதி ஆட்கள்’ அய்யா..கோவை தொகுதியில் நாம போன முறை தனியா நிண்ணு 4.31 லட்சம் ஓட்டுகள் வாங்கி இருக்கோம். அந்த தொகுதிய பா.ஜ.க.வுக்கு கொடுக்க வேண்டாம் ‘என்று முறையிட்டு சென்றுள்ளனர்.
–பாப்பாங்குளம் பாரதி