சேலம்:
நாடு முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், சேலம் பள்ளி ஒன்றில் அவசரம் அவசரமாக மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி மார்ச் மாதம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கிடையில் தேர்தல் அறிவிப்பு வெளியாகி விட்டபடியால், முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் மேல்நிலை வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அவசரம் அவசரமாக மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.
விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று பிளஸ்-2 மாணவ மாணவிகளை பள்ளி வரவழைத்து, மடிக்கணினி வழங்கப்பட்டு உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால், பள்ளிகள் அனைத்தும் தேர்தல் பணிக்கு ஒதுக்கப்பட வேண்டும். இதன் காரணமாக கையிருப்பில் உள்ள மடிக்கணினிகளை பாதுகாக்க முடியாது என்ற நோக்கத்தில், மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இது எதிர்க்கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து புகார் தெரிவித்தால், மாணவ மாணவிகளின் வாக்குகள் தங்களுக்கு எதிராக திரும்பி விடும் என்ற பயத்தில், அவர்களுக்கும் புகார் கொடுக்க தயங்கி வருவதாக கூறப்படுகிறது.