சென்னை:
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தேர்தலை எதிர்த்து தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற இருப்பதாக, தேர்தல் ஆணையத்திடம் திமுக வேட்பாளராக போட்டியிட்ட சரவணன் மனு கொடுத்துள்ளார்.
மக்களவை தேர்தல் மற்றும் தமிழகத்தில் உள்ள காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தும் வகையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் குறித்து அறிவிப்புகள் வெளியாகவில்லை.
இந்நிலையில், மனு தாரர்கள் இந்த வழக்குகளை வாபஸ் பெற்றால் தேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து, திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக வேட்பாளர் சரவணன் , தேர்தல் ஆணையத்திடம் இன்று கடிதம் ஒன்றை அளித்தார்.
அதில் தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாகவும், தொகுதி மக்களின் நலன் கருதி இடைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை ஏற்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா? என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று தெரிகிறது.