கலராடோ, அமெரிக்கா
க்யூபா நாட்டில் தயாரிக்கப்படும் புற்று நோய் மருந்துக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளதால் அமெரிக்க புற்று நோயாளிகள் மிகவும் தவிப்படைந்துள்ளனர்.
அமெரிக்கவில் நுரையீரல் புற்று நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மருந்தை க்யூபா நாடு தயாரித்து வருகிறது க்யூபா நாட்டு மருந்துகளை விற்கவோ உபயோகிக்கவோ அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை ஒட்டி பல நோயாளிகள் க்யூபா நாட்டுக்கு சென்று மருந்தை உட்செலுத்திக் கொண்டனர்.
தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் க்யூப செல்வதற்கான விதிமுறைகளை கடுமையாக்கி உள்ளார். இதனால் பல புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் தவித்து வருகின்றனர். தற்போது இந்த மருந்துகள் சட்டவிரோதமாக க்யூபாவில் இருந்து கடத்தப்பட்டு அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகின்றன.
நுரையீரல் புற்று நோய் முழுமையாக குணப்படுத்த முடியாத ஒன்றாகும். இந்த மருந்தின் மூலம் உடல் பாதிப்படைவதை பெருமளவில் குறைக்க முடியும். சரியாக சொல்லப்போனால் இவர்களின் மரணத்தை சற்றே தள்ளி வைக்க முடியும். இத்தகைய மருந்தான சிமாவாக்ஸ் மிகவும் பிரபலாமாக இருந்து வந்தது. தற்போது க்யூபா நாட்டின் கண்டுபிடிப்பான வாக்சிரா என்னும் மருந்து இன்னும் சக்தி வாயந்ததாகும்.
தற்போதைய நிலையில் க்யூபாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக செல்வதை அதிபர் டிரம்ப்பின் அரசு முழுமையாக தடை செய்துள்ளது. ஆகவே க்யூபாவுக்கு செல்பவர்கள் சட்ட விரோதமாகவே செல்ல வேண்டி உள்ளது. அத்துடன் இவ்வாறு செல்பவர்கள் திருட்டுத்தனமாக இந்த மருந்துகளை பெருமளவில் கடத்தி வருகின்றனர்.
இது குறித்து புற்று நோயால்பாதிக்கப்பட்ட ஜார்ஜ் என்னும் கலரோடா நகர வாசி, “நான் ஒரு கட்டிட அமைப்பாளர். எனக்கு 65 வயதாகிறது. மூன்று பேரக்குழந்தைகள் உள்ளனர். நான் சட்டவிரோதமான எதையும் செய்யக்கூடாது எனஎன் பேரக்குழந்தைகளுக்கு அறிவுறுத்துகிறேன். ஆனால் எனது நோய்க்கான மருந்தை சட்டவிரோதமாக பெற்று வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.