புதுடெல்லி:

தேர்தலை மனதில் வைத்து தற்போதைய சூழலை ஊதிப் பெரிதாக்க பிரதமர் மோடி முயற்சிப்பதாக ரா புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவர் ஏஎஸ். துலாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்திய-பாகிஸ்தான் உறவு மற்றும் காஷ்மீர் விவகாரங்களில் அனுபவம் மிக்கவர் ஏஎஸ்.துலாத். கடந்த 1980-ம் ஆண்டிலிருந்து ஜம்மு மற்றும் காஷ்மீரில்  அரசு உயர் பதவியை வகித்திருக்கிறார்.

1999-2000- ம் ஆண்டில் நடந்த கார்கில் போரின்போது, ரிசர்ச் அன்ட் அனலைஸ் விங் எனப்படும் ‘ரா’ அமைப்பின் தலைவராக துலாத் இருந்தார்.
அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு காஷ்மீர் விவகாரம் குறித்த ஆலோசகராக பணியாற்றியிருக்கிறார்.

‘தி காரவன்’ இணையத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள பால்கோட் பகுதியில் தீவிரவாத முகாம்களை வான்வெளி தாக்குதலில் அழிப்பதும், அங்கு சிக்கிய நமது விமானப்படை விமானியை பாகிஸ்தான் விடுவிப்பதும் வர இருக்கிற மக்களவை தேர்தலையொட்டிய நிகழ்வாகவே பார்க்கின்றேன்.

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்திய அரசின் நடவடிக்கை பற்றி கருத்து கூற விரும்பவில்லை. ஆனால், விமான தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதம் உள்ளிட்ட அனைத்தையும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளிப்படுத்திய விதம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

அவர் சொல்ல வருவது என்னவென்றால், இதே போன்ற நடவடிக்கையை எங்களாலும் மேற்கொள்ள முடியும். எங்களை கோபமூட்டிக் கொண்டிருந்தால், நாங்களும் இதே போன்ற தாக்குதலை மேற்கொள்வோம் என்பது தான் அவரது மென்மையான பதிலின் அர்த்தம்.

இதன்மூலம் இம்ரான் கான் பாகிஸ்தானிலும் சர்வதேச அளவிலும் நல்ல பெயரை சம்பாதித்துள்ளார்.

அதேசமயம், இந்த விமான தாக்குதல் மூலம் நரேந்திர மோடிக்கு சர்வதேச அளவில் எந்த அளவுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிவோம். மக்களவை தேர்தலில் இந்த விவகாரத்தை முன்னிறுத்தி பலன் அடையப் பார்க்கிறார் மோடி.

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு வான்வெளி தாக்குதல் நடத்துவது தவிர்க்க முடியாமல் போனதற்கு, சிலரின் தேர்தல் மனநிலையே காரணம்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வேண்டுகோளை ஏற்று, அமைதிப் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்து இவ்வளவு பதற்றத்தையும் முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். தற்போது ராஜதந்திரம் தான் தேவை.

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதோ, அல்லது நடத்தாமல் போவதோ அது அரசின் முடிவு.
குத்துச் சண்டையில் 3 அடிப்படை சுற்றுகள் உண்டு. அதன்படி, இப்போது ஆடிக் கொண்டிருப்பது முதல் ரவுண்ட். உங்களுக்கு ஒரு விசயம் தெரியாது.

சூழ்நிலை தானாகவே விளையாடி முடித்துவிட்டது. மக்களவை தேர்தல் முன்னே இருக்கிறது. இது இரண்டாவது, மூன்றாவது ரவுண்ட். இந்த மக்கள் என்ன நினைத்திருக்கிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்.
காஷ்மீர் பிரச்சினையில் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் மோடியின் அணுகுமுறையை ஒப்பிடமுடியாது என்பதை ஒவ்வொருவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வாஜ்பாய் உயர்ந்த மனிதர். கடைசி வரை காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதி மக்கள் மீது அவர் மரியாதை வைத்திருந்தார் என்றால் மிகையாகாது.
ஆனால் இப்போது பள்ளத்தாக்கில் என்ன நடக்கிறது பாருங்கள். காஷ்மீர் பிரச்சினையை ராணுவ நடவடிக்கையால் தீர்க்க முடியாது. மோடி பிரதமரானதும், காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களுக்கு ஏராளமான நம்பிக்கை இருந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக காஷ்மீர் பிரச்சினையை குழப்பிவிட்டோம்.

கடந்த 30 ஆண்டுகளாகவே தீவிரவாதத்தை பக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கிறது இந்தியா. பாகிஸ்தானின் தீவிரவாத தொழிற்சாலை இருப்பதும், அதில் தீவிரவாதிகள் உருவாக்கப்படுவதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை.

இதே விசயத்தில் பாகிஸ்தானும் பாதிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளின் அச்சுறுத்தலைவிட, பாகிஸ்தானுக்கு தீவிரவாத இயக்கங்களால் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.
ஆபத்தான பக்கத்து நாட்டை வைத்துக் கொண்டுதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

காஷ்மீர் விவகாரத்தை ஒவ்வொரு பிரதமரும் சோதித்துப் பார்த்திருக்கிறார்கள்.
வாஜ்பாய் 3 முறை சோதித்துப் பார்த்திருக்கிறார். கார்கில் போர், இந்திய விமானம் கடத்தல், நாடாளுமன்ற வளாக தாக்குல் ஆகியவற்றை அவர் எதிர்கொண்டுள்ளார். அவர் கடைசிவரை ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டது கிடையாது.

மன்மோகன் சிங்கும் பிரதமராக இருந்தபோது மும்பை தாக்குதலை எதிர்கொண்டார். இவர்களை ஒப்பிடும் போது மோடி அதிர்ஷ்டசாலி. இதுவரை புல்வாமா தாக்குதல் தான் அவர் சந்தித்த பெரிய சோதனை.

வாஜ்பாயும், மன்மோகன் சிங்கும் குறைவாக பேசுவார்கள், செயல் அதிகமாக இருக்கும். ஆனால் மோடியோ இந்த விவகாரத்தை பூதாகரமாக்கப் பார்க்கிறார்.

இவ்வாறு  ரா புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவர் ஏஎஸ்.துலாத் கூறியுள்ளார்.