டில்லி

விங் கமாண்டர் அபிநந்தனை இந்தியாவுக்கு கொண்டு வர சிறப்பு விமானம் ஒன்றை இந்தியா அனுப்ப பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்திய எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானை விரட்டி அடிக்க சென்ற இந்திய விமானப்படை விமானம் பாகிஸ்தானியர்களால் தகர்க்கப்பட்டது.   அதை செலுத்திய விங் கமாண்டர் அபிநந்தன் சிறை பிடிக்கப்பட்டார்.    பல நாடுகளின் வற்புறுத்தலுக்கு இணங்க இன்று அபிநந்தன் விடுவிக்கப்பட உள்ளார்.  அவரை வாகா எல்லையில் கொண்டு வந்து விட உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தது.

அபிநந்தன் தற்போது இந்தியா திரும்ப இரு வழிகள் உள்ளன.  ஒன்று பாகிஸ்தான் தெரிவித்த படி அவரை சாலை மார்க்கமாக இந்திய வாகா எல்லை மூலமாக அழைத்து வருவது.   மற்றொன்று இஸ்லாமாபாத்தில் இருந்து நேரடியாக விமானம் மூலம் அழைத்து வருவது.   வாகா எல்லையில் அவரை பார்க்க ஏராளமான மக்கள் கூட நேரிடும் என்பதால் அவரை நேரடியாக விமானம் மூலம் அழைத்து வர இந்தியா விரும்பியது.

எனவே இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் ஒன்றை அனுப்பி அபிநந்தனை அழைத்து வர இந்தியா திட்டமிட்டு அதில் விமானியுடன் பயணம் செய்ய உள்ள அதிகாரிகளின் விவரஙக்ளையும்  அனுப்பி வைத்தது.   ஆனால் இந்திய விமானம் தங்கள் நாட்டுக்கு வரக்கூடாது என பாகிஸ்தான் மறுத்துள்ளது.  இதனால் அபிநந்தன் சாலை வழியாக வாகா எல்லைக்கு அழைத்து வரப் பட உள்ளார்.

வாகா எல்லையில் அவரை வரவேற்க ஏராளமான மக்கள் கூடி உள்ளனர்.  அத்துடன் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அவரை வாகாவில் சென்று வரவேற்க எண்ணி உள்ளார்.    ஆகவே அங்கு மக்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது   வாகாவில் ஒவ்வொரு நாளும் மாலை இரு நாட்டு வீரர்களும் கொடி இறக்குவதை காண ஏராளமானோர் கூடுவது வழக்கம்.

கூட்டத்தை கட்டுப் படுத்த இன்று கொடி இறக்குவதை காண பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.    அத்துடன் அபிநந்தனை மீடியாவை சேர்ந்த யாரும் நெருங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.