திருவனந்தபுரம்:
லவ் ஜிகாத் சர்ச்சை மூலம் அகில இந்திய புகழ்பெற்ற ஹாதியா தனது மருத்துவ படிப்பை வெற்றிகரமாக முடித்து மருத்துவரானார்.
இதை அவரது காதல் கணவர் ஷஃபீன் ஜஹான் சமூக வலைதளத்தில், ஹாதியாவின் கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்புடன் உள்ள புகைப்படத்துடன் பதிவிட்டு பெருமிதம் கொண்டுள்ளார்.
கேரள மாநிலம், வைக்கம் மாவட்டத்தைச் சேர்ந்த அகிலா என்ற பெண், ஷஃபீன் ஜஹான் என்ற முஸ்லிம் இளைஞரை இஸ்லாதுக்கு மதம் மாறி திருமணம் செய்து கொண்டார். மேலும், அவர் தனது பெயரை ஹாதியா என்றும் மாற்றிக் கொண்டார்.
இதற்கு கடும் எதிர்த்து தெரிவித்த ஹாதியாவின் தந்தை அசோகன், தனது மகளை ஷஃபீன் ஜஹான் மூளைச்சலவை செய்து, மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாகக் கூறி, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், அந்தத் திருமணம் செல்லாது என்று அறிவித்தது.
அதை எதிர்த்து, அந்தப் பெண்ணின் கணவர் ஜஹான், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்தப் பெண்ணின் ஒப்புதலின் படியே திருமணம் நடைபெற்றுள்ளதா என்பதை அறிய, தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.
அதையடுத்து என்ஐஏ விசாரணைக்கு தடை கோரி, அந்தப் பெண்ணின் கணவர் மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தை விசாரித்த என்ஐஏ அமைப்பு, அந்தப் பெண்ணை, ஜஹான் மூளைச்சலவை செய்து, சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்த்து விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்நிலையில், அந்தப் பெண்ணின் விருப்பப்படியே திருமணம் நடைபெற்றதா என்பதை அறிவதற்கு அவரை நேரில் ஆஜர்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அப்போது தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த ஹாதியா, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரிடம் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அந்தப் பெண் தனது கணவருடனே செல்வதற்கு விருப்பம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அந்தப் பெண் தமிழகத்தில் கல்வியைத் தொடருமாறு நீதிபதிகள் அனுப்பி வைத்தனர். தமிழ்நாட்டின் சேலம் நகருக்கு வந்து கல்லூரியில் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கேரள காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், அந்தப் பெண் பயிலும் சேலம் நகரில் உள்ள அந்த தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் தலைவரை, பாதுகாவலராக நியமித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், ஹாதியா தற்போது தனது ஹோமியோபதி மருத்துவ படிப்பை முடித்து விட்டு டாக்டராக பணியாற்றும் தகுதி பெற்றுள்ளார். இதை அவரது கணவர் ஷஃபீன் ஜஹான், ஹாதியாவின் படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளார்.
ஹாதியாவுக்கு இது பிரகாசமான வெற்றி, பல்வேறு இடையூறுகளுக்கிடையேயும், , அன்பு, பொறுமை மற்றும் முடிவில்லாத பிரார்த்தனைகளால் அவருக்கு இந்த பிரகாசமான வெற்றி கிடைத்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்! என்றும், உங்களை ‘டாக்டர்’ என்று அழைப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது என்றும் ஷஃபீன் ஜஹான் அதில் பதிவிட்டு உள்ளார்.