டில்லி:

நாடாளுமன்ற தேர்தலின்போது வாக்காளர்கள்  வாக்களிக்க வாக்காளர் சீட்டை மட்டும் தனியாக இனி பயன்படுத்த முடியாது, அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட அட்டையாள அட்டையும் இருந்தால் தான் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இனிமேல் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்கும் வாக்காளர்கள்   வாக்காளர் சீட்டு (வோட்டர் ஸ்லிப்)  உடன்  வாக்குச்சாவடிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை உடன் கொண்டு வர வேண்டியது கட்டாயம் என்றும் அகில இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனையின்போது, வோட்டர் ஸ்லிப்புகளில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை, ஆதலால் அதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, வாக்காளர்களை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங் களின் ஊழியர்கள் ஆகியோருக்கு புகைப்படத்துடன் அளிக்கப்பட்டுள்ள அடையாள அட்டைகள், வங்கிகள் அல்லது தபால் நிலைய கணக்கு புத்தகங்கள், பான் அட்டை, பதிவாளர் ஜெனரலால் அளிக்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அடையாள அட்டை, மத்திய தொழிலாளர் அமைச்சகத்தால் அளிக்கப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் ஸ்மார்ட் அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்களிக்கும்போது கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.

தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் புள்ளி விவரங்கள், 99 சதவீத வாக்காளர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாகவும், வயது வந்தோர்களில் 99 சதவீதம் பேரிடம் ஆதார் அட்டை கள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றன. இவற்றை கவனத்தில் கொண்டு, வோட்டர் ஸ்லிப் மட்டும், வாக்களிக்க போதாது என்ற முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

இருப்பினும், வோட்டர் ஸ்லிப்புகள் தொடர்ந்து அச்சிடப்படும், தேர்தல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அவை வாக்காளர்களிடையே விநியோகிக்கப்படும். அந்த ஸ்லிப்புகளில், இது அடையாள ஆவணமாக ஏற்கப்பட மாட்டாது என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

தேர்தலில் எந்த வாக்காளர்களும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட 12 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்குச்சாவடிக்கு கொண்டு வர வேண்டும் என்று வாக்காளர்களை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.