பாகிஸ்தானிடம் பிடிபட்ட போது தைரியமாக துப்பாக்கியில் வானத்தை நோக்கி சுட்ட அபிநந்தனின் தைரியத்தையும், இந்திய ராணுவத்தின் ரகசியங்கள் குறித்த ஆவணங்களை அழிக்க முயன்ற அவரின் மன உறுதியையும் பாராட்டி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Abhinandannn

கடந்த 14ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இத்தகைய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று முன் தினம் பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் முகாமிட்ட தீவிரவாதிகள் மீது இந்திய விமானப்படை துல்லியத் தாக்குதல் நடத்தியது. இதில் 200க்கும் மேற்பட்ட முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இந்திய எல்லையில் பறந்த பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதற்கெல்லாம பழித்தீர்க்கும் விதமாக பாகிஸ்தான் எல்லையில் சென்ற இந்திய மிக் ரக விமானத்தை அந்நாட்டு ராணுவம் சுட்டது. அந்த விமானம் வெடித்ததும் அதில் இருந்து பாராஷூட் மூலம் பறந்த விமானி பாகிஸ்தான் எல்லையில் விழுந்தார். கீழே விழுந்ததும் அங்கிருந்தவர்களை நோக்கிய விமானி அபிநந்தன் இது பாகிஸ்தானா, இந்தியாவா என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இந்தியா என கூறியுள்ளனர். உடனே இந்தியாவிற்கு ஆதரவாக அபிநந்தன் குரலெழுப்பியுள்ளார். மேலும், தனது முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், குடிக்க தண்ணீர் வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் அபிநந்தன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கீழே கிடந்த கற்களை எடுத்து அவர்மீது எறிந்தனர். இதனால் சுதாரித்துக் கொண்ட அபிநந்தன் தன் கையில் வைத்திருந்த பிஸ்டலை எடுத்து வானத்தை நோக்கி சுட்டுக் கொண்டே ஓடியுள்ளார். அங்கிருந்தவர்களும் அபிநந்தனை துரத்திக் கொண்டு ஓடியுள்ளார். உடனே அருகிலிருந்த ஒரு குளத்தில் குதித்த அபிநந்தன் இந்திய ரணுவ ரகசியங்கள் குறித்த ஆவணங்களை தண்ணீர் மூழ்கடித்து அழிக்க முயற்சித்துள்ளார்.

pilot

அப்போது அபிநந்தன் துரத்தப்பட்டவர்களால் காலில் சுடப்பட்டார். அதனால் கீழே விழுந்த அபிநந்தனை அவர்கள் அனைவரும் சூழ்ந்துக் கொண்டு தாக்கினர். இதில் ரத்தம் முகத்தில் வழிந்தோட, கைகள் கட்டப்பட்ட நிலையில் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்டார். அபிநந்தன் கீழே விழுந்ததும் அவர் பிடிப்பட்டு தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தன் பெயர், ஊர், மதம், பதவி குறித்த தகவல்களை தவிர்த்து வேறு எதனையும் பாகிஸ்தானிடம் அபிநந்தன் பகிரவில்லை என கூறப்படுகிறது.

எதிரிகளிடம் சிக்கிக் கொண்டபோதும், அவர்களுக்கு அடிப்பணியாமல் மன உறுதியுடன் செயல்பட்டு இந்திய ஆவணங்களை அழிக்க முயன்ற அபிநந்தனின் தைரியத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். விரைவில் அவர் பாதுகாப்பாக இந்தியா திரும்ப பல தரப்பினரும் கோரிக்கைகளை விடுத்து வருவதுடன், கடவுளையும் பிரார்த்திக்கின்றனர்.

பாகிஸ்தானிடம் பிடிப்பட்ட அபிநந்தன் தமிழகத்தின் திருவண்ணாமலையை சேர்ந்தவர் என்பதும், அவரது குடும்பம் சென்னையில் வசித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து மூன்றுத் தலைமுறைகளாக அபிநந்தனின் குடும்பம் நாட்டிற்காக விமானப்படையில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.