ஜெய்ப்பூர்:
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, கடந்த 26ந்தேதி பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்திய நேரத்தில் பிறந்த குழந்தைக்கு ‘மிராஜ்’ என்று போர் விமானத்தின் பெயர் சூட்டி அசத்தி உள்ளனர் ராஜஸ்தான் தம்பதியினர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் ரத்தோா் தம்பதியினருக்கு கடந்த 26ம் தேதி அதிகாலை 5 மணியளவில் அறுவையின் மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த சமயத்தில்தான், இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து பயங்கரவாத முகாம்களை வெடிகுண்டு வீசி தகர்ந்து எறிந்தது.
இதையறிந்த ரத்தோர் தம்பதியினர், இந்திய விமானப்படையினரை கவுரவிக்கும் வகையாக, பிறந்த ஆண் குழந்தைக்கு, போர் விமானமான ‘மிராஜ்’ பெயரை சூட்டி மகிழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய ரத்தோர், எங்கள் குடும்பத்தை சேர்ந்த பலர் ராணுவத்தில் பணியாற்றி உள்ளனர். தற்போதும் பணியாற்றி வருகிறார்கள். தற்போது பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதல் அதிகாலை 3.30 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றதாக கூறப்பட்டது. தாக்குதல் முடிவடைந்த நேரமான அதிகாலை 5 மணி அளவில் எனக்கு மகன் பிறந்துள்ளதால், இந்திய விமானப்படையின் வீரத்தை பாராட்டும் விதமாகவும், அவா்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் எனது குழந்தைக்கு “மிராஜ்” என்று பெயா் சூட்டி இருக்கிறோம் என்று கூறி உள்ளார்.