நமக்கு மற்றுமொரு போர் தேவையில்லை, இந்தியாவும் – பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டுமென தீவிரவாதிகளால் சுடப்பட்ட மலாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 14ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லையில் பால்கோட் பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது நேற்று முன் தினம் இந்திய விமானப்படை துல்லியத் தாக்குதல் நடத்தியது. இந்த துல்லியத் தாக்குதலில் ஏராளமான ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
விமானப்படை தாக்குதலுக்கு பதிலடியாக இன்று காலை, பாகிஸ்தான் இந்திய எல்லையில் இருநாட்டு வீரர்களும் தாக்குதலில் ஈடுபட்டனர். இது ஒருபுறம் இருக்க இந்திய விமானப்படை விமான அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவப் பிடியில் சிக்கியுள்ளார். அவரை பாதுகாப்பாக மீட்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் தீவிரவாதிகள் தலையில் சுடப்பட்டு மீண்டும் உயிர்பிழைத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த மலாலா தற்போது நிலவும் சூழலில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காண வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடரபாக மலாலா தனது டிவிட்டர் பதிவில், “ இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுவதால் எல்லையில் வசிக்கும் மக்கள் மீது அக்கறைக் கொண்டு யூனிசெஃபின் அமைதிக்கான தூதர் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் போரின் கொடுமைக் குறித்து தெரியும். பழிவாங்குதல் என்பது நல்ல தீர்வாக இருக்காது. போர் ஆரம்பித்து விட்டால் அது ஆர்வமாகத் தான் முடியும். ஆனால் ஏராளாமான மக்கள் இதில் பாதிக்கப்படுவார்கள்.
நமக்கு மற்றுமொரு போர் தேவையில்லை. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், இந்திய பிரதமர் மோடியும் தங்களுக்கான தலைமைப் பண்பை காண்பிக்க வேண்டும். இருவரும் அமர்ந்து, கைக்குலுக்கி பேசி வார்த்தை மூலம் தற்போது உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உயிரிழப்புகளை தவிர்த்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பேச்சு வார்த்தையை மேற்கொள்ள சர்வதேச சமூகம் ஆதரிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இரு நாட்டு மக்களுக்கு அவர்களது எதிரி தீவிரவாதம், படிப்பறிவின்மை, ஏழ்மை என்பது நன்கு தெரிவியும். இரு நாடுகளும் அல்ல” என மலாலா தெரிவித்துள்ளார்.