டில்லி:

பாகிஸ்தான் மீதான  ராணுவ நடவடிக்கையின்போது துரதிர்ஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளான மிக்-21 போர்  விமானத்தை இயக்கிய விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கி உள்ளார்.

அவரை கைது செய்து பாகிஸ்தான் ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானில் சிக்கி உள்ள விமானி அபிநந்தன் சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவரது தந்தையும் ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் என்று கூறப்படுகிறது.

அபிநந்தனின் பூர்வீகம் திருண்ணாமலை என்றும், அவரின் முழுப்பெயர் அபிநந்தன் வர்த்தமான். இவரின் சர்வீஸ் எண் 27981. இவரின் விங் கமாண்டர் விமானி. இவர் 173 கோர்ஸ் பிரிவை சேர்ந்தவர்.

இவரின் அப்பாவின் பெயர் வர்த்தமான். அவரும் ஏர்மார்ஷலாக இருந்தார். 2004ம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் இணைந்து சேவையாற்றி வருகிறார் அபிநந்தன், என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

அபிநந்தன் சென்னையைச் சேர்ந்தவர். இவர் படித்தது, வளர்ந்தது, விமானபடைக்கு முதற்கட்ட பயிற்சி எடுத்தது எல்லாம் சென்னையில்தான். அதன்பின் வடமாநிலங்களில் பல இடங்களில் ராணுவ முகாம்களில் பணியாற்றி இருக்கிறார்.

அபிநந்தனின் பூர்வீகம் திருண்ணாமலை அருகே திருப்பனவூர் கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.  அபிநந்தன் குடும்பத்தினர்  சென்னை, சேலையூர் அருகே மாடம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

இன்று காலை மிக்-21 விமானத்தில் சென்று பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்திய போது பாகிஸ்தான் படை சுட்டு வீழ்த்திய நிலையில், விமானி அபிநந்தன், ராணுவத்தினரிடம் சிக்கி உள்ளார்.

இதற்கிடையில் பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமானப்படை விமானியான அபிநந்தனின் படத்தை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டு உள்ளது.