டில்லி:

ந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால் நாளை நடைபெற இருந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கும் வகையில், நேற்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை வெடிகுண்டு வீசி அழித்தது.

இதன் காரணமாக இந்தியா மீது கோபம் கொண்டுள்ள பாகிஸ்தான், நாங்களும் இந்தியாவை தாக்க நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து  பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சிப்பதும், அதை இந்திய விமானப்படை விரட்டியடிப்பதும் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில்,  பிப்ரவரி 28ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அகமதாபாத்தில் நடைபெறும் என்றும், அன்றைய தினம் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடை பெறும் என்றும் காங்கிரஸ் தலைமை  ஏற்கனவே அறிவித்திருந்து.

ஆனால், தற்போதைய போர்ச்சூழல் காரணமாகவும், பாதுகாப்பு கருதியும் நாளை நடைபெற இருந்த கூட்டத்தை ஒத்தி வைப்பதாக ராகுல்காந்தி அறிவித்து உள்ளார்.

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் 58 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்றும், அன்றைய தினம் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தனது தாயார் சோனியா மற்றும் சகோதரி பிரியங்கா காந்தியுடன் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற இருந்தார். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போதைய போர் சூழல் காரணமாக  கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.