நெட்டிசன்

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…

ரசியல் களத்தில் ஓவராக சீன் போட்டதற்கான விலையை கொடுத்துக்கொண்டிருக்கிறது பாமக..

எல்லாருமே காலத்திற்கு ஏற்ப கூட்டணி மாறிய படியேதான் இருக்கிறார்கள்.. ஆனால் யாருமே இனி இவர்களோடு கூட்டே கிடையாது என மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்லிவந்ததில்லை..

களத்தின் நிஜம் புரியாமல் காலை தாறுமறாக வைத்து சிக்கிக்கொள்வதில் பாமகவுக்கு ஈடு இணை எந்த கட்சியுமே கிடையாது.. அதுபற்றி விவரித்தால் போய் கொண்டே இருக்கும்..

சத்தியம் வைப்பது, சவுக்கால் அடியுங்கள் என்று சொல்வதல்லாம் அரசியலில் பெருங்காமெடி யாகத்தான் போய் முடியும் என்று பாமக என்றைக்குமே புரிந்து கொள்ளப்போவதில்லை..

அரசியலில் கடுமையாக விமர்சித்துவிட்டு அவர்களுடனே கூட்டணி என்பது இங்கு சர்வ சாதாரணம். அவ்வளவு ஏன் ரத்தகளம் ரணகளமாக சண்டை போட்டவர்களே கூடிக்குலவிய பூமி, தமிழக பூமி..

ஜெயலலிதாவின் முதல் ஆட்சியில் சுப்ரமணியசுவாமிக்கு, உலகப்புகழ் பெற்ற ”சேலை தூக்கல்” தரிசனம் காட்டியது, நாயை துரத்துவதுபோல போலீசார் சு.சாமியை துரத்தியது என நிறைய உண்டு..

ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா முகத்தில் ”வானத்தில் இருந்து” தானாக ஆசிட் ஊற்றியது.. அதனால்தான்  பின்னாளில் சு.சாமி கட்சி சார்பில் சென்னை மேயருக்கு போட்டியிட்ட அதே சந்திரலேகாவுக்கு ஜெயலலிதா ஆதரவு தெரிவித்தார்

இன்னொரு பக்கம், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்க வைத்த சு.சாமிக்கே சில ஆண்டுகளில் கை குலுக்கி மதுரை லோக்சபா சீட்டை தந்து ஜெயிக்க வைத்தார் ஜெயலலிதா.. அவருக்கு மத்திய நிதியமைச்சர் பதவியை தரவேண்டும் என்று அப்போதைய பிரதமர் வாஜ்பாய்கே நெருக்கடி கொடுத்தார் ஜெயலலிதா..

ஜெயலலிதாவைவிட, ஆசீட் வீச்சிற்கு ஆளான சந்திரலேகாவுக்கும் வெட்கமில்லை.. சு.சாமிக்கு அதைவிட வெட்கமேயில்லை…

மறுபடியும் பாமகவுக்கு வருவோம். அடக்கி வாசிப்பது ஒன்றுதான் அரசியலில் சாலச்சிறந்தது என்பதை அக்கட்சி இனியாவது புரிந்தால் சரி…

எம்ஜிஆர் உயிரோடு இருந்த காலத்தில் கலைஞர் ஒரு நாளைக்கு பத்து பிரச்சினைகளை போட்டு ஓவராய் பேசுவார். எம்ஜிஆரிடம் இதுபற்றி கேட்டால்,

”இந்த எம்ஜி ராமச்சந்திரனைப்பற்றி, எதைச்சொன்னாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற தைரியத்தில் கலைஞர் எதையெதையோ பேசிச்கொண்டிருக்கிறார்.. அவற்றை மக்களே பார்த்துக் கொள்வார்கள்” என்று சிம்பிளாக முடித்துவிடுவார்..

அரசியலில் தேவையற்ற வகையில் பலரை மிகவும் கடுமையாக விமர்சித்து விட்டு அதன் பிறகு நிலைப் பாட்டை மாற்றிக்கொண்டு விமர்சனத்திற்கு ஆளான வர்கள் என, கலைஞரில் தொடங்கி, ஜெயலலிதா, ஸ்டாலின், வைகோ அப்புறம் குட்டீஸ் ஈவிகேஸ் என பெரிய பட்டியலே உண்டு..

பகலில் அக்கம்பக்கம் பார்த்து பேசு. இரவில் அதையும் பேசாதே என்பார்கள்.. ஆனால் பாமக இரவு பகல் பாராமல் அது மட்டுமே வித்தியாசமான கட்சி, உலகத் துலயே இல்லாத கட்சி,திராவிட கட்சிகளுடனே கூட்டு கிடையாது என நீட்டி முழுங்கி விட்டு அதன்பிறகு கூட்டணி என்று போனது தான் பிரச்சினைக்கே காரணம்..

பொதுவெளி அணுகுமுறை விவகாரத்தில் சுய பரி சோதனை செய்துகொள்ளாவிட்டால் டாக்டர்கள் கட்சிக்கு நோய் தீரவே தீராது.. இப்போதைக்கு கும்மி எடுப்பார்கள்.. வாங்கித்தான் தீரவேண்டும்..

முட்ட முட்ட துன்னா, கக்க கக்க வாந்தி எடுத்துதானே ஆவணும்…