நேற்று ஒரு தோழி வாட்ஸ் அப் மெசேஜில் ஆண்கள் ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தி தரக்குறைவாகப் பேசக் காரணம் ,அவ்வப்போது நாம் நம் எதிர்ப்பைப் பதிவு செய்யாமல் போனதே காரணம் என்று ஆரம்பித்து அவரின் கருத்துக்களைச் சொல்லியிருந்தார்.
அவருக்கு நான் எழுதிய பதில்…
நல்ல கட்டுரை தோழி தேன்மொழி. ஆனால் எனக்கு எழும் சில நெருடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வார்த்தைகள் பற்றிப் பேசுகிறோமே எது கெட்ட வார்த்தை தோழி. நாம் நம்முடைய உறுப்புகள் குறித்த எந்தப் புரிதலை நம் ஆண் , பெண் என இரு பாலர் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறோம். பிறப்புறுப்பும் ஒரு உறுப்பு . அதைப் பற்றிப் பேச , சொல்ல நாம் ஏன் வெட்கப்படுகிறோம் , கூச்சப் படுகிறோம் . அதனால் தானே ஆண்கள் நம்மை ஒடுக்க அந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்.
உனக்கு இருப்பது போல் எனக்கான பாலுறுப்பு தானடா அது என நாம் என்றைக்கு தைரியமாய்ச் சொல்லப் போகிறோமோ அன்றுதான் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி நம்மைக் கூனிக் குறுக வைக்கும் ஆண் சமூகம் இவர்கள் எதற்கும் கலங்காதவர்கள் என்று யோசிக்கும். நம் ஆண் குழந்தைகளுக்கு இதற்கான புரிதல் என்ன கொடுத்திருக்கிறோம். பத்தாம் வகுப்பில் அந்தப் பாடத்தைத் தவிர்க்கும் ஆசிரியர்கள் தானே இங்குள்ளனர். பாலியல் கல்வி என்றவுடன் அதை பொத்தாம் பொதுவாய் எதிர்ப்பவர்கள் தானே இருக்கின்றனர் நம் சமூகத்தில். அந்த உறுப்புகள் எந்த விதத்தில் தனக்குப் பயன்பட்டது என்ற புரிதல் அவனுக்கு எங்கு கொடுக்கப்பட்டது.. காமக் கண்ணோட்டத்தில் பார்க்கத்தானே இந்தச் சமுதாயம் சொல்லித் தந்திருக்கிறது.
அதைத் தாண்டி தானாய் எப்படி அவனால் சிந்திக்க முடியும். அடுத்த தலைமுறை உருவாக்குதல் மட்டுமே நோக்கமாய்க் கொண்டிருக்கும் ஆண் பெண்ணின் உடல் உறுப்பு பார்த்து ஈர்க்கப்படுதல் இயல்பு , அந்த இயல்பு மாறினால் தான் செயற்கைத்தனம். மனித அறிவு வளர்ச்சி அவனுக்கு அதனை நாகரீகமாக வெளிக்காட்டச் சொல்லித் தருகிறது… அது எப்படி ஒருவனுக்கு சென்றிருக்கிறது என்பதைப் பொறுத்தே அவனின் வெளிப்பாடுகள் அமைகிறது என்பது என் கருத்து தோழி. இதில் வளர்ந்த ஆணைத் திருத்த முடியாது. ஆனால் அவனுக்கான புரிதல் கொடுக்க என்ன முன்னேற்பாடுகள் நம் சமுதாயத்தில் நடைமுறைப் படுத்தப் படுகிறது தோழி.m.