புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட இருவர் பாதுகாப்புப்படையினரால் கொல்லப்பட்டனர்.
கடந்த 14ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது, அவ்வழியாக வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்டு வந்த கார் ஒன்று மோதியது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பரிதாபமாக வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி வீரர்களின் தியாகம் வீண் போகாது என கூறியதுடன், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருந்து மீள்வதற்குள் புல்வாமா மாவட்டத்தில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட்டது. பின்க்லான் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே சில மணி நேரம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் ராணுவ அதிகாரி மேஜர் வி.எஸ். தவுண்டியால் உட்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்துல்ளனர்.
பல மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் காலி ரஷீத் மற்றும் கம்ரான் என்ற இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.