புதுச்சேரி:
கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக புதுவை முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டம் நடத்துவ தால், கிரண்பேடி பாதுகாப்புக்காக 5 பட்டாலியன் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
புதுச்சேரி கவர்னராக கிரண்பேடி நியமினம் செய்யப்பட்டதில் இருந்து மாநில அரசுக்கும், அவருக்கும் இடையே அதிகார மோதல் நடைபெற்று வருகிறது.. மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிட்டு, தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கும் கிரண்பேடி யின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் கடும் தெரிவித்தும், அவர் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.
இந்த நிலையில், கட்டாயம் ஹெல்மெட் அணிய உத்தரவிட்டதில் கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. கவர்னர் உத்தரவுகளை அமல்படுத்த மாநில டிஜிபி சுந்தரி நந்தா அதிரடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதற்கு மாநில அரசு சார்பில் அதிருப்தி தெரிவிக்கப் பட்டது.
ஆனால், பிடிவாதமாக தனது உத்தரவை அமல்படுத்திய கிரண்பேடி, அவரே களத்தில் இறங்கி ஹெல்போடாத இரு சக்கரவாகன ஓட்டிகளை மடக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். ஏராள மானோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இது மாநிலத்தில் சலசலப்பை ஏற்டுத்தியது.
இதனால் அதிருப்தி அடைந்த முதல்வர் நாராயணசாமி அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து, அனைவரும் கருப்பு சட்டை அணிந்து ஆளுநர் மாளிகைக்கு எதிரே வந்து ஆளுநருக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் குதித்தனர். அவருடன் அமைச்சர்களும், அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று முழுவதும் தர்ணா தொடர்ந்தது. நள்ளிரவிலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
மாநில முதல்வரே கவர்னருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் செய்வதறியாது திகைத்து நின்றனர். போராட்டம் தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தனது பாதுகாப்புகாக கிரண்பேடி மத்திய அரசிடம் பாதுகாப்பு கோரியிருந்தார். அதன்படி 5 பட்டாலியன் துணை ராணுவ படையினர் புதுச்சேரியில் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கிரண்பேடிக்கு பாதுகாப்பாக கவர்னர் மாளிகையை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் கவர்னர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமிக்கு, போராட்டத்தை கைவிடுமாறும், இதன் காரணமாக தேவையில்லாத பிரச்சினை ஏற்படுகிறது என்றும், இதுகுறித்து வரும் 21ந்தேதி விரிவாக பேசலாம் என கடிதம் எழுதி உள்ளார்.
இதன் காரணமாக புதுச்சேரியில் பரபரப்பு நிலவி வருகிறது. மம்தா பாணியில் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் அரசியல் கட்சிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.