டில்லி:

குடியுரிமை சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கலாக உள்ள நிலையில், காங்கிரஸ் எம்பிக்கள் கண்டிப்பாக அவையில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ்  கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா,  இன்று  மாநிலங்களவையில்  தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மசோதா நிறைவேறாமல் தடுக்கும் பொருட்டு மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டியதிருப்பதால், காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் இன்று அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள வேண்டும் என்றும், மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும்  காங்கிரஸ்  கொறடா உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற  நாடு களில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதத்தினர்,  தொடர்ந்து ஆறு ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே, அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது.

இதற்காக 1955-ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு,  கடந்த 2016-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சட்டம் குறித்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழு வின் ஆய்விற்கு சென்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து நாடாமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்தியஅரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த மசோதாவை  மாநிலங்களவை யில் அறிமுகம் செய்து இன்றே வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைய இருப்பதால், மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இன்று தவறாமல் அவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று  கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.