டில்லி:

வெளிநாடு வாழ் இந்தியர்களின் மோசடி திருமணத்தில் சிக்காமல் இருக்கும் வகையில், வெளிநாடு வாழ் இந்தியர் திருமணம் பதிவு செய்வது கட்டாயம் என்று புதிய சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில்  அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி திருமணம் செய்த 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், இல்லையேல் அவர்களது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்யும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு பல பெண்கள், அவர்கள் குறித்து  ஆராயாமல் மணம் செய்துகொண்டு பின்னர் பெரும் துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதுபோன்ற மோசடி திருமணங்களில் இருந்து காக்கும் பொருட்டு மத்திய அரசு புதிய சட்டதிருத்த மசோதா அறிமுகம் செய்துள்ளது.

அதில், வெளிநாட்டினரையோ, வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இந்தியர்க ளையோ திருமணம் செய்தால், அவர்கள் 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் ஆஜராகி அவர்கள் திருமணம் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

அவ்வாறு பதிவு செய்யாதவர்களின்  சொத்துக்களை பறிமுதல் செய்யவும், அவரது பாஸ்போர்ட் அல்லது விசாவை பறிமுதல் செய்யவோ, திரும்பப்பெறவோ முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  இதுபோன்ற திருமணங்கள்  இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ எங்கு திருமணம் நடந்தாலும் இந்த மசோதா பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.