சென்னை:
பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு, அதில் நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.
கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் உள்ள இடை நிலை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன காரண மாக அரசு பணிகள் மட்டுமல்லாமல் மாணவ மாணவிகளின் கல்வியும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இதையடுத்து, ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த கோகுல் என்னும் மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுமீதான விசாரணை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து, 25ம் தேதிக்குள் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் கூறியது.
ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் முறையிடப்பட்டது.
அப்போது நடைபெற்ற விசாரணையின்போது, அரசு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை ஜன.30ந்தேதி வரை நியமிக்க வில்லை என்று கூறப்பட்டது.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையை அடுத்து, பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது; அது அரசின் பொறுப்பு என்று சென்னை உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.