டில்லி
சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சிபிஐ இயக்குனராக பணி ஆற்றி வந்த அலோக் வர்மாவை மத்திய அரசு அவர் மீது எழுந்த ஊழல் புகாரை அடுத்து கட்டாயமாக விடுப்பில் அனுப்பியது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதை ஒட்டி அலோக் வர்மா மீண்டும் இயக்குனராக பதவி ஏற்றார். பிரதமர் மோடி தலைமையிலான சிபிஐ இயக்குனர் நியமனக் குழு அலோக் வர்மாவை சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கம் செய்து தீயணைப்புத் துறைக்கு மாற்றியது.
வரும் 31 ஆம் தேதியுடன் அலோக் வர்மாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் அவர் சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது சிபிஐ வரலாற்றில் முதல் நிகழ்வாகும். அலோக் வர்மா தனது பணியிட மாற்றத்தை ஏற்க விரும்பவில்லை. அதனால் தனது தீயணைப்புத் துறை இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார்.
தற்போது மீண்டும் சிபிஐ அமைப்பின் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதை ஒட்டி அவர் மீண்டும் இயக்குனராக வெள்ளி அன்று பதவி ஏற்றார். நாகேஸ்வரராவை மீண்டும் சிபிஐ இடைக்கால இயக்குனராக நியமித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர் பரத் பூஷன் வழக்கு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு மனுவில், “மேலிட சிபாரிசின் அடிப்படையில் இந்த தேர்வு நடந்துள்ளது. எனவே முறையாக ஒரு தேர்வு நடத்தி சிபிஐ இயக்குனர் நியமனம் செய்யப்பட வேண்டும். இந்த நியமனத்தில் வெளிப்படைத் தன்மை காணப்படவில்லை. ஆகவே வெளிப்படை தன்மையுடன் கூடிய தேர்வை நடத்த வேண்டும். அதில் எவ்வித அரசியல் தலையீடும் இருக்கக் கூடாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.