திருவனந்தபுரம்:
சபரிமலையில் 2 பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆர். எஸ். எஸ் பிரமுகர் ஒருவர் பாதி மீசையை வழித்துக் கொண்டார்.
சபரிமலையில் அனைத்துப் பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபிறகு. பாஜக,, உட்பட எதிர்கட்சிகள் கேரளத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தரிசனத்துக்கு சென்ற 50 வயதுக்கும் குறைவான பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில், பிந்து மற்றும் கனகதுர்கா ஆகிய 2 பெண்கள் சபரிமலையில் ஐயப்பனை தரிசித்தனர். இந்த தகவல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாஜக மற்றும் இந்து அமைப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இந்த தகவலை உறுதி செய்த பின்னர், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் , கேரளத்தைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் தொண்டர் ராஜேஸ் குருப்(வயது 39) என்பவர் தனது ஒரு பக்க மீசையை வழித்துக் கொண்டார்.
தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையிலும்,கோயில் சொத்துகள் கொள்ளையடிக்கப்படாமல் இருக்கவும், இந்துக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் மீசையை பாதியாக வழித்துக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
சபரிமைலக்கு மாலை அணிந்து சென்ற தன்னை போலீஸ் அதிகாரி ஒருவர் நெஞ்சில் எட்டி உதைந்ததாக, சில நாட்களுக்கு முன்பு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ராஜேஸ் குருப் பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் அந்த புகைப்படம் போலியானது என்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே , 2 பெண்களுக்கு ஐயப்பனை தரிசித்ததைக் கண்டித்த சபரிமலை கர்மா சமிதி சார்பில் மாநிலம் தழுவி முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாலக்காட்டில் கேரள சட்ட அமைச்சர் ஏகே. பாலன் பேசிக் கொண்டிருந்தபோது, பாஜகவினர் அப்பகுதியில் கடைகளை அடைக்குமாறு கோஷமிட்டனர். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் சிலர் தாக்கப்பட்டனர். இதற்கிடையே, தங்களது போராட்டம் மேலும் தொடரும் என பாஜகவினர் அறிவித்துள்ளனர்.
சபரிமலை விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.