ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் அமைச்சர் ஒருவர் தனது சாதிக்கே முக்கியத்துவம் அளிப்பேன் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிப்பெற்றதை தொடர்ந்து அம்மாநில முதல்வராக அசோக் கெலாட் பதவி ஏற்றார். அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவையில் மம்தாபூபேஷ் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ளார். ராஜஸ்தான் அமைச்சரவையில் உள்ள ஒரே பெண் அமைச்சர் மம்தா பூபேஷ். இவர் அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரே பழங்குடியின உறுப்பினர் ஆவார்.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள ரெனி பகுதியில் பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மம்தாபூபேஷ் எனது சாதிக்கே முக்கியத்துவம் அளிப்பேன் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பொதுகூடத்தில் மம்தாபூபேஷ் பேசியதாவது, “ எனது சாதியை சேர்ந்த மக்களுக்கு வேலை செய்வதே எனது முதல் பணி. அவர்கள் வளர்ச்சி அடைய முக்கியத்துவம் அளிப்பேன். எனது சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு மக்களும் பலனடைய பாடுபடுவேன். மற்ற சமூகத்திற்கு இணையாக எனது சாதியினரை கொண்டு வருவேன் “ என பேசியுள்ளார்.
அவரது இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சியினரான பாஜகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளார் முகேஷ்பரீக் கூறும்போது, “ கடந்த சில தினங்களுக்கு முன்புதான் நாட்டில் உள்ள அனைவரும் சமம் என்று கூறி மம்தா பூபேஷ் பதவி ஏற்றார். தற்போது அவர் தனது சமூகத்துக்கு முன்னிரிமை அளிப்பேன் என கூறுவது மக்களை மக்களை சாதி வாரியாக தூண்டுவதாக உள்ளது” என கூறினார்.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தான் அவ்வாறு பேசவில்லை என்றும், அனைவருக்காகவும் பாடுபடுவேன் எனவும் மம்தாபூபேஷ் தெரிவித்துள்ளார்.