கமதாபாத்

குஜராத் மாநிலப் பள்ளிகளின் வருகை பதிவின் போது ஜெய்ஹிந்த் மற்றும் ஜெய் பாரத் என பதிலளிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் வருகைப் பதிவின் போது மாணவ மாணவிகள் ஆங்கிலத்தில் பிரசண்ட் சார் அல்லது பிரசண்ட் மேடம் என பதில் அளிப்பது வழக்கம். சில இடங்களில் எஸ் சார் அல்லது எஸ் டீச்சர் எனவும் கூறுவார்கள். அல்லது அவரவர் மாநில மொழிகள்ல் உள்ளேன் ஐயா அல்லது உள்ளேன் அம்மா எனவும் கூறுவது வெகுநாட்களாக வழக்கமாக உள்ளது.

குஜராத்தை ஆளும் பாஜக அரசு இந்த வழக்கத்தை இன்று முதல் மாற்றி அமைத்துள்ளது நேற்று குஜராத் மாநில அனைத்துப் பள்ளி கல்வித் துறை இயக்குனராகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “ஜனவரி 1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்கள் இனி உள்ளேன் ஐயா, உள்ளேன் அம்மா என பதில் அளிக்கக் கூடாது.

அவரவர் பெயர்களை அழைக்கும் போது ஜெய்ஹிந்த் மற்றும் ஜெய் பாரத் என பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு மாணவர்கள் பதில் அளிக்க ஆசிரியர்கள் பயிற்றுவிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. கடந்த திங்கள் அன்று நடந்த குஜராத் மாநில கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.