வகுப்பறையில் மதுபாட்டில்கள்
வகுப்பறையில் மதுபாட்டில்கள்

நாட்றம்பள்ளி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர், குடிபோதையில் பள்ளிக்கு வந்ததால், பள்ளிக்கு பூட்டு போட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகை இட்டார்கள்.
வாணியம்பாடி அருகே நாட்றம்பள்ளி அடுத்த சின்னூர் கிராமம்.இங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொத்தம் 28 மாணவர்கள் பயில்கிறார்கள்.
இப்பள்ளியில் சின்னத்தம்பி தலைமை ஆசிரியராகவும்,பரதன் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்கள். .கடந்த சில மாதங்களாக தலைமை ஆசிரியர் சின்னத்தம்பி குடிபோதையில் பள்ளிக்கு வருவதாக மாணவர்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்து வந்தார்கள்.
 
போதை ஆசிரியரிடம் விசாரணை
போதை ஆசிரியரிடம் விசாரணை

இந்த நிலையில் தலைமை ஆசிரியர் மது பாட்டில்களுடன் பள்ளிக்கு வந்து வகுப்பறையில் மாணவர்கள் முன்பாக மது குடிக்க ஆரம்பித்தார். மேலும் மாணவன் ஒருவரை அழைத்து அவனது வீட்டில் இருந்த வறுத்த வேர்கடலை கொண்டுவர உத்தரவிட்டார்.
மாணவன் தன் வீட்டிற்க்கு சென்று தன் தாயிடம் தலைமை ஆசிரியர் வகுப்பறையில் மது குடித்து வருவதாகவும் அதற்கு வருத்த வேர்க்கடலை கேட்டார் என்றும் கூறியுள்ளான். இந்தத் தகவலை, தாய்ர் ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் பொதுமக்களுக்கு இத்தகவலை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஊராட்சிமன்ற தலைவர் லதா சம்பத் ,மாணவர்கள் பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளிக்கு சென்றார்கள். அங்கு தலைமை ஆசிரியர் சின்னத்தம்பி, வகுப்பறையில் மது அருந்திக்கொண்டு இருந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பள்ளியில் இருந்த மாணவர்களை வெளியில் அனுப்பிவிட்டு தலைமை ஆசிரியர் சின்னதம்பியை மட்டும், வகுப்பறையில் வைத்து பூட்டினர். பிறகு, கல்வித்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி
கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி

இதையடுத்து, ஜோலார்பேட்டை தொடக்க கல்வி உதவி அலுவலர் தென்னவன் பள்ளிக்கு விரைந்து வந்தார். சிறைவைக்கப்பட்டிருந்த தலைமை ஆசிரியரை மீட்டு விசாரணை நடத்தினார். விசாரணையில் வகுப்பறையில் மது குடித்ததை தலைமை ஆசிரியர் ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையே மக்கள் முற்றுகை போராட்டம் நடத்த ஆரம்பித்தனர். தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்று தொடக்க கல்வி அலுவலர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றார்கள்.
சம்பவம் நடந்தது, கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் ஜோலார்பேட்டை தொகுதி யில் என்பது குறிப்பிடத்தக்கது.