மும்பையில் பள்ளிகளுக்கு இடையிலான 16 வயதுக்குட்பட்டோர் பண்டாரி டிராபி கிரிக்கெட் தொடர் கடந்த நான்காம் தேதி துவங்கியது. இதில் பங்குகொண்ட பிரனவ் தனவேத் என்ற மாணவர் 1009 ரன்கள் எடுக்க.. அதிசய செய்தியாக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.
இது குறித்து எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான அருணகிரி, தனது முகநூல் பக்கத்தில் “சாதனையா, கேலிக்கூத்தா” என்ற தலைப்பில் எழுதி உள்ளார்.
அந்தபதிவில் அருணகிரி குறிப்பிட்டுள்ளதாவது:
“மும்பை மாணவர்1000 ரன்கள் குவித்து அனைத்து ஆங்கில ஏடுகளிலும் முதல் பக்கத் தலைப்புச் செய்தியில் இடம் பிடித்தார். இது எனக்கு ஐயத்தை ஏற்படுத்தியது.
நடந்தது இதுதான்,
இவர்கள் 16 வயதுக்குட்பட்ட அணியினர். எதிர் அணியில் ஆறு பேர் தேர்வு எழுதப் போய்விட்டதால் அவர்களுக்குப் பதிலாக 12 வயதுக்குட்பட்டோர் அணியில் இருந்து ஆறு பேரை ஆடச் சேர்த்துக் கொண்டார்கள்.
அடுத்து. பவுண்டரி எல்லை 59 மீட்டர் இருக்க வேண்டும். இந்தத் திடலில் ஸ்கொயர் லெக் பகுதியில் அது 27 மீட்டராகவே இருந்திருக்கின்றது.
எதிர் அணியினர் இதுவரையிலும டென்னிஸ் பந்தில் ஆடியவர்கள். முதன்முறையாக கிரிக்கெட் பந்தில் ஆடும்போது. அடிபடும் என்ற பயத்தில் இந்தச் சாதனை மாணவர் கொடுத்த 21 கேட்சுகளைப் பிடித்து நழுவ விட்டுள்ளனர்
இதெல்லாம் ஒரு சாதனையா? அல்லது கேலிக்கூத்தா?”