டில்லி
பிரதமரின் நமோ செயலி மூலம் பிரதமரிடம் நேரடியாக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பற்றி தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி பதவி ஏற்றதும் நமோ என்னும் செயலி உருவாக்கப்பட்டது. பிரதமரின் முழுப்பெயரான நரேந்திர மோடி என்பதன் சுருக்கமே நமோ ஆகும். சமீபத்தில் அந்த செயலி மூலம் பிரதமரை தொடர்பு கொண்டு மோடி எரிவாயு மானியம் பெற்றவர்களுடன் உரையாடியது தெரிந்ததே.
தற்போது அந்த செயலி மூலம் ஒவ்வொரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரைக் குறித்தும், பாராளுமன்ற உறுப்பினரைக் குறித்தும் பிரதமரிடம் நேரடியாக புகார் அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரை குறித்தும் பிரதமர் அறிந்துக் கொள முடியும்.
வரும் 2019 தேர்தலில் இந்த செயலி பிரதமருக்கு பெரும் உதவி செய்யும் என கூறப்படுகிறது. இதில் வரும் புகாரின் அடிப்படையில் அவர்களுக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிப்பது குறித்து பிரதமர் முடிவு செய்ய உள்ளார் என சொல்லப்படுகிறது. அத்துடன் அனைத்து உறுப்பினர்களின் தலையின் மேல் கத்தி தொங்குவதால் அவர்கள் தொகுதி மக்களின் குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பார்கள் என கட்சியின் தலைவர் ஒருவர் கூறி உள்ளார்.