டில்லி:

நாட்டின் தேசிய அளவிலான முதல் விளையாட்டு பல்கலைக்கழகம் மணிப்பூர் அமைகிறது. இதற்கான கோப்பில் குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் கையெழுத்திட்டார்.

தேசிய அளவிலான விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை மணிப்பூரில் அமைக்க மத்திய அமைச்சரவை கடந்த மாதம் 23ந்தேதி ஒப்புதல் அளித்தது. அதைத்தொடர்ந்து அந்த கோப்பு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மணிப்பூரில் தேசிய அளவில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்க வகை செய்யும் மசோதா நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது குடியரசு தலைவரும் அனுமதி அளித்து உள்ளார்.

பல்கலைக்கழகம் அமைப்பதற்குத் தேவையான  325.90 ஏக்கர் நிலத்தை மணிப்பூர் மாநில அரசு தேர்வு செய்து பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகமானது தடகள வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் வெவ்வேறு விதமான பயிற்சிகளை அளிக்கும். விளையாட்டு அறிவியல், விளையாட்டு தொழில்நுட்பம், உயர் மட்ட பயிற்சி ஆகியவை இந்த பல்கலைக்கழகத்தின் நோக்கமாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேசிய அளவில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டம் குறித்து கடந்த  2014-15-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, அதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது