செய்தியாளர்களை அவமரியாதை செய்த நடிகர் ரஜினிகாந்தை எதிர்த்து போராட்டம் நடத்த இருப்பதாக சென்னை பத்திரிகையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தூத்துக்குடியின் கலவர சூழல் ஏற்பட்டதற்கு சமூகவிரோதிகளே காரணம். காவல்துறையினரை சமூகவிரோதிகள் தாக்கியதால்தான் பெரும் பிரச்சினை ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.
பிறகு சென்னை திரும்பிய அவர் மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் சரமாரியாக கேள்விக்கணை தொடுத்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமான ரஜினி, “ஏய்.. இன்னும் ஏதும் கேள்வி இருக்கா” என்று செய்தியாளர்களை நோக்கி கேட்டார். ரஜினியின் அவமரியாதையான வார்த்தைகளைக் கேட்ட செய்தியாளர் அதிர்ந்தனர்.
இந்த நிலையில் சென்னை பத்திரிகையாளர் சங்க தலைவர் வி.அன்பழகன், ரஜினியின் செய்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் “செய்தியாளர்களை மரியாதையின்றி ஒருமையில் விளித்த ரஜினிகாந்துக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது” என்று அறிவித்துள்ளார்.
இதே போல சென்னை பத்திரிகையாளர் சங்கமும் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.