தூத்துக்குடி மக்களின் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்த ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அறிவிப்பை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் 12 பேர் காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் பலியானார்கள். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மாலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “தமிழ்நாட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு மிகவும் கொடூரமானது. இது மனிதத் தன்மையற்ற செயல். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் பெருமளவில் கூடுவார்கள் என்பது ஆட்சியாளர்களுக்கு முன்கூட்டியே தெரியும். அப்படி இருக்கும்போது, ஆட்சியாளர்கள் ஏன் மக்களைச் சந்தித்துப் பேசவில்லை. மக்களிடம் ஆட்சியாளர்கள் பேசியிருந்தால் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது” என்றார்.
மேலும், “பேரணியின்போது, காவல்துறை முதலில் தாக்கியதால் மக்கள் தாக்க ஆரம்பித்தனர். பேரணியில் ஈடுபட்டிருந்த மக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்குச் செல்வதற்கு முன்னதாக ஆட்சியர் அலுவலகத்தில் வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் சொல்கின்றனர். அப்படியானால் தீ வைத்தது யார்?
வன விலங்குகளைச் சுட்டால் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், தமிழர்களைச் சுட்டால் மீ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஈழத்தில் சிங்களவர்கள் நம்மைத் தாக்கினார்கள். இங்கு, நம்மவர்களே நம்மளதைத் தாக்குகிறார்கள். தற்போது தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. தமிழக அரசு உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அறிவிப்பை வெளியிட வேண்டும். அப்படி இல்லையென்றால் மக்கள் கொந்தளிப்பு முடிவுக்கு வரும் என்று சொல்லமுடியாது: என்று சீமான் தெரிவித்தார்