சென்னை:
தூத்துக்குடி கலவரம் துப்பாக்கி சூடு தொடர்பாக முதல்வரை சந்திக்க தலைமைச் செயலகத்துக்குச் சென்ற ஸ்டாலின் உள்பட திமுகவினர் முதல்வர் பழனிசாமியை சந்திக்க அனுமதி கோரினர்.
ஆனால், அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்கள் 20 பேர் முதல்வர் அறை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமியும் மற்றும் காங்கிரசாரும் இணைந்து தர்ணா செய்து வருகின்றனர். இதன் காரணமாக கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் அறை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வரும் ஸ்டாலின் உள்பட 20 திமுக எம்எல்ஏக்களை அகற்ற போலீசார் முயற்சி மேற்கொண்டனர். இதன் காரணமாக திமுக எம்எல்ஏக்களுக்கும், போலீசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஸ்டாலினை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று வெளியே விட்டனர்.
ஸ்டாலின் சாலை மறியல் வீடியோ…
அதைத்தொடர்ந்து கோட்டைக்கு எதிரே உள்ள சாலையில் அமர்ந்து ஸ்டாலின் உள்பட திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த திமுக தொண்டர்கள், கோட்டை நோக்கி விரைந்தனர். தலைமைச் செயலகம் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.