பிற நாட்டிலிருந்து அமீரகம் (யு.ஏ.இ.) வரும் தொழிலாளர்களுக்கான பணி ஒப்பந்த அறிக்கை அவரவர் தாய்மொழியிலேயே இருக்கும் என்று கடந்த டிசம்பர் மாதம் அந்நாட்டு அரசு அறிவித்தது. அந்த நடைமுறை இன்று முதல் அமலாகிறது. விண்ணப்பம் தமிழ் மொழியிலும் இருக்கும் என்பது மகிழ்ச்சியான செய்தி.
இதனால், அரபி மொழியில் இருக்கும் விண்ணப்பத்தை புரிந்துகொள்ள முடியாமல் தமிழக தொழிலாளர்கள் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வது தவிர்க்கப்படும்.
“அமீரகம் போலவே மற்ற அரபு நாடுகளும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும்” என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இன்னொரு புறம், “நமது தாய்மொழியான தமிழை அரபு நாடு ஒன்று ஏற்றுக்கொண்டு தமிழில் விண்ணப்பங்களை அளிக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால் தாய்த் தமிழகத்தில் அந்த நிலை எப்போது ஏற்படுமோ?
தபால் அலுவலகங்களில் பெரும் போராட்டத்துக்குப் பிறகு தமிழில் விண்ணப்பங்கள் அளிக்க உத்தரவிட்டனர். ஆனால் அது வெறும் ஏட்டுச்சுரைக்காயாகவே இருக்கிறது. இன்றளவும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களே பெரும்பாலும் அங்கு விநியோகிக்கப்படுகின்றன.
அதே போல எல்லா வங்கிகளிலும் ஆங்கிலத்திலேயே விண்ணப்பங்கள் இருக்கின்றன. இதனால் படிக்காத பாமர மக்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. அமீரகத்தைப் பார்த்தாவது இங்கே மாற்றம் வரவேண்டும்” என்ற குரலும் எழ ஆரம்பித்திருக்கிறது.
உரியவர்கள் கவனிப்பார்களா?