தஞ்சாவூர்:
தமிழகத்தில் ராமராஜ்ய ரத யாத்திரை தொடங்க போவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இன்று தனது பிறந்தநாளை தஞ்சாவூரில் கொண்டாடிய அர்ஜுன் சம்பத், விரைவில் ராமராஜ்ய ரத யாத்திரையை இந்து மக்கள் கட்சி சார்பில் தொடங்க உள்ளதாக கூறினார்.
இந்த ரத யாத்திரை தஞ்சாவூரில் இருந்து தொடங்கும் என்றும், தமிழகத்தில் இந்து மக்கள் கட்சி நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கட்சியை வளர்க்கவும், தமிழகத்தில் திராவிட கட்சிகளே இல்லாத நிலையை உருவாக்கவும், ராமராஜ்ய யாத்திரை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார்.
மேலும், காவிரி நீரை பொறுத்தவரையில் தமிழகத்திற்கு உரிய உரிமையை உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் நிலை நாட்டும் என்பதில் நம்பிக்கை உள்ளது என்றும், காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்காமல் போனதற்கு தி.மு.க. தான் காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தொடர்ந்து போராட்டங்களை தூண்டி விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.