டில்லி:
நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியதற்கு உச்சநீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தால், இந்த ஆண்டு தமிழக மாணவர்கள் தங்களுக்குரிய வெளி மாநில மையங்களில்தான் தேர்வு எழுத வேண்டும் என்றும் அடுத்த வருடம், சிபிஎஸ்இ இதுபோன்ற ஓரவஞ்சனை செய்யாது என்றும் கூறி உள்ளது.
மே 6ந்தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான மையம் ஒதுக்குவதில் சிபிஎஸ்இ ஓரவஞ்சனை செய்துள்ளது. தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கி உள்ளது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என கடந்த 27ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு வெளிமாநில மையங்கள் ஒதுக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இருந்தாலும் இந்த ஆண்டு தேர்வு மையங்களை மாற்ற போதிய நேரமின்மை காரணமாக, மாணவர்கள் தங்களுக்குரிய வெளி மாநில மையங்களில் தேர்வு எழுத வேண்டும் என்றும் அடுத்த வருடம் தமிழக மாணவர்களுக்கு இதுபோன்று சிபிஎஸ்இ ஓரவஞ்சனை செய்யாது என்று கூறிய நீதி மன்றம், அவர்கள் விண்ணப்பித்த இடங்களிலியே தேர்வு மையத்தை ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
உச்சநீதி மன்றத்தின் இன்றைய தீர்ப்பில் சிபிஎஸ்இ கல்வி வாரியம், தமிழகத்துக்கும், தமிழக மாணவர்களுக்கும் எதிரான நிலையில் இருந்து வருவது வெட்டவெளிச்சமாகி உள்ளது.