prabha

 

 

சிறையில் பிரபாகரன்

 

எனது வாக்குமூலத்தைக் கேட்டு காவல் அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள் அல்லவா?

நான் சொன்னது இதுதான்: “பிரபாகரனுக்கும்  மற்ற விடுதலைப்புலிகளுக்கும் எனது வீட்டில் அடைக்கலம்  கொடுத்தது உன்மை. சிங்கள வெறியர்களின் கொடுமைகளுக்கு ஆளாகி உயிர் தப்பி, ஓடிவரும் ஈழத் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்து  ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை. அந்த கடமையைத்தான் செய்தேன். எதிர்காலத்திலும் அவ்வாறே செய்வேன்’’

இந்த என் வாக்குமூலத்தைக் கேட்டுத்தான் காவல் அதிகாரிகள் அதிர்ச்சியானார்கள். அப்போது பிரபாகரன், புலிகள் என்பதையெல்லாம்.. ஏன்.. ஈழப்போராட்டத்தின் அவசியத்தைக்கூட பெரும்பாலான தமிழக தமிழர்கள் அறிந்திருக்கவில்லை. தவிர, துப்பாக்கி என்றாலே, பயங்கரவாதி என்கிற எண்ணம் மட்டுமே பொதுமக்களுக்கு எழக்கூடிய காலகட்டம் அது.

என் மீது அன்புகொண்ட அதிகாரிகள், “இந்த வாக்குமூலத்தால் உங்கள் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடும்” என்று மீண்டும் கூறினார்கள். ஆனால் எனது வாக்குமூலத்தை மாற்ற விரும்பவில்லை. ‘ இதற்கிடையில் பிரபாகரனையும் முகுந்தனையும் இலங்கைக்கு அழைத்துச் செல்ல, அங்கிருந்து இன்ஸ்பெக்டர்-ஜெனரலான ருத்ரா.இராசசிங்கம் தலைமையில் சிங்கள உயர் காவல் அதிகாரிகள் சென்னை வந்திருப்பதாக தகவல் கிடைத்தது.

உடனடியாக அதை கண்டித்து (26-5-82 அன்று) ஒரு அறிக்கை வெளியிட்டதோடு, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து இது தொடர்பாக பேசினேன். இதையடுத்து 1982-ஆம் ஆண்டு ஜூன் 1-ம் தேதியன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த ஏற்பாடு ஆகியது.

கூட்டம் ஆரம்பிக்க ஒரு மணி நேரம்தான் இருக்கும்… அதிமுகவின்  பொதுச் செயலாளராக இருந்த ப.உ.சண்முகம் என்னுடன் தொலைபேசி மூலம்  தொடர்புகொண்டார். “இந்த விசயம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் எம்.ஜி.ஆர். கூட்டப்போகிறார். ஆகவே இந்த கூட்டத்தை நடத்தாதீர்கள்” என்று வேண்டினார்.

நான், “முதல்வர் எம்.ஜி.ஆர். கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டம்தான் அதிகாரபூர்வமான கூட்டமாக இருக்கும். அதே இந்த கூட்டத்தில் நிறைவேறப்படும் தீர்மானம் முதலமைச்சரின் கரங்களை மேலும் வலுபடுத்துவதாகவே இருக்கும்” என்றேன்.

அதன் பிறகு, முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அனுமதியுடன் ப.உ.சண்முகமும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். தி.மு.க.சார்பில் பிரதிநிதிகள் யாரும் வரவில்லை என்றாலும் இக்கூட்டத்தின் நோக்கத்தினை வரவேற்றுத் தி.மு.க.தலைவர் கருணாநிதி ஒரு கடிதம்  அனுப்பி வைத்தார்.

தமிழகத்தின் இருபது கட்சிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் அது.

பிரபாகரன் ,முகுந்தன் ஆகியோரை எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டுமென்றும் எக்காரணம் கொண்டும் இவர்களைச் சிங்களக் காவல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய இந்திய பிரதமர் இந்திர காந்திக்கு அனைத்து கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்ட விண்ணப்பம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தக் கூட்டமும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் மத்திய மாநில அரசுகளை சிந்திக்க வைத்தது. அதன் விளைவாக பிரபாகரன், முகுந்தன் இருவரையும் நாடுகடத்தும் முயற்சி தடைபட்டது.

அதே நேரம், விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த  மற்றத் தோழர்களைக் காவல் துறை வலைவீசித் தேடுவது தொடர்ந்தது. எனவே முக்கியமான சில தோழர்களைப் பத்திரமாக மறைத்துவைக்க வேணடிய அவசியம் ஏற்பட்டது. கிட்டு, ரஞ்சன், பண்டிதர், சீலன், புலேந்திரன், பொன்னம்மான், இளங்குமரன் ஆகியோரை நெல்லை மாவட்டம் பாபநாசத்திலுள்ள எங்கள் வீட்டில் மறைத்து வைத்தேன். சில மாதங்கள் அவர்கள் அங்கு தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்கள்.

அதற்குப் பிறகு சென்னை மத்தியச் சிறையில் வைக்கப்பட்டிருந்த பிரபாகரனையும் முகுந்தனையும் சந்தித்து பேசினேன்.

சென்னை சிறைவாசத்தை பிரபாகரன் எப்படி எதிர்கொண்டார்…?

 

(சொல்கிறேன்)