வாஷிங்டன்:

அமெரிக்காவில் தங்கியுள்ள 9 ஆயிரம் நேபாளிகளின் தற்காலி குடியுரிமையை ரத்து செய்ய உள்நாட்டு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றது முதல் அங்கு வாழும் வெளிநாட்டினருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக இந்தியர்கள் பயனடைந்து வந்த ஹெச்1பி விசா முறையில் பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறார். இதைதொடர்ந்து தற்போது அமெரிக்காவில் பல்வேறு அந்தஸ்துகளில் தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த வகையில் உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்ஜெவ் நைல்சன் ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ஓராண்டு காலத்திற்குள் நேபாளிகள் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் 2019ம் ஆண்டு ஜூன் 24ம் தேதிக்கு பின்னர் வெளியேற்றத்தை சந்திக்க நேரிடும்’’ என்று தெரிவித்துள்ளார்.

நேபாளிகள் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக தங்கியிருக்க தற்காலிக குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய டிரமப் அரசு முடிவு செய்துள்ளது. நேபாளில் 2015ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 ஆயிரம் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த வகையில் அமெரிக்காவில் தற்காலிக குடியுரிமையுடன் தங்கியுள்ள 9 ஆயிரம் நேபாளிக வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.