பெங்களூரு:
தனது நண்பனுக்கு மனைவியை விருந்தாக கூறி வற்புறுத்தி மனைவியின் தற்கொலைக்கு காரணமான கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கெங்கேரி பகுதியை சேர்ந்தவர் அசோக். (வயது 30) இவரும் சுப்ரியா என்ற 24 வயது பெண்ணும் காதலித்து ஏழு மாதங்கள் முன்பு திருமணம் செய்துகொண்டனர்.
சுப்ரியா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்த சுப்ரியா, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை திண்று மயங்கிவிழுந்தார்.
உடனடியாக பெற்றோரால் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சுப்ரியா கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் மருமகன் அசோக் மீது சுப்ரியா தாய் அந்தோனம்மா, காவல்துறையில் புகார் அளித்தார். அதில் தனது மகளை அசோக் அவரது நண்பருடன் உடலுறவு கொள்ளச் சொல்லி வற்புறுத்தியதாகவும், சுப்ரியா மறுத்ததால், அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொடர்ந்து அசோக் துன்புறுத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், “கேரளாவுக்கு தியான வகுப்பு ஒன்றுக்கு சுப்ரியா சென்றார். அங்கு அசோக்குடன் பழக்கம் ஏற்பட்டது. அசோக்கை காதலிப்பதாக கூறி, எங்களை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார். ஆனால், அவரது முடிவு இவ்வளவு மோசமானதாக போய்விட்டது. அசோக் தன்னை கொடுமைப்படுத்தியதை சுப்ரியா எங்களிடம் கூறவில்லை. கமிஷனர் அலுவலகத்திலுள்ள, மகளிர் உதவி மையத்தில், சுப்ரியா தனது கணவன் பற்றி புகார் கொடுத்தார். அங்குள்ள நிபுணர்கள், இருவரையும் அழைத்து கவுன்சிலிங் கொடுத்தனர். அங்கு, தான் சரியாக இருப்பதாக உறுதியளித்து திரும்பிய அசோக், மீண்டும், எனது மகளிடம் தகராறு செய்தார். புகார் கொடுத்ததை வைத்தே கடுமையாக தாக்கியிருக்கிறார். மகள் கொடுத்த புகார் காப்பியை நான் படித்து பார்த்த பிறகுதான் இந்த விவரம் தெரிந்தது” என்று அன்தோனம்மா தெரிவித்துள்ளார்.
அன்தோனம்மா புகாரை ஏற்றுக்கொண்டுள்ள கெங்கேரி போலீசார் வரதட்சணை கொடுமை மற்றும் பெண்ணை கொடுமைப்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து சுப்ரியாவின் கணவர் அசோக்கை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.