பாவ்நகர், குஜராத்
மின் திட்டங்களுக்காக விளை நிலங்களை குஜராத் கையகப்படுத்தியதால் அங்குள்ள விவசாயிகள் மரணம் அடைய அனுமதி கோரி பாவ்நகர் ஆட்சியாளருக்கு விண்ணப்பித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள 12 கிராமங்காளில் புதிய மின் திட்டங்கள் செயல்பட உள்ளன. இதற்காக அங்குள்ள விளை நிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு அந்த கிராம விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குஜராத் அரசு அவர்களுக்கு மாற்றாக தர உள்ள நிலங்கள் விவசாய நிலங்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் துயருற்ற அந்த விவசாயிகள் 5299 பேர் பாவ்நகர் மாவட்ட ஆட்சியாளருக்கு விண்ணப்பம் ஒன்றை அளித்துள்ள்னர். அதில்,”நாங்கள் பல வருடங்களாக இந்த நிலங்களில் விவசாயம் செய்து அதன் மூலம் பிழைத்து வருகிறோம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குஜரத் மின் வாரியம் எங்களது விளை நிலங்களை கையகப்படுத்தி அங்கு புதிய மின் திட்டங்கள் அமைக்க திட்டமிட்டது.
அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் மின் வாரியம் அந்த நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் 2013ஆம் வருட சட்டப்படி கையகப்படுத்தும் திட்டம் ஐந்து வருடங்களைக் கடந்தால் அது செல்லாத திட்டம் ஆகும். மீண்டும் ஒரு தீர்மானம் உருவாக்கி நில உரிமையாளர்களின் அனுமதியைப் பெற வேண்டும்.
ஆனால் இந்த சட்டத்தை மதிக்காமல் மின் வாரியம் காவல்துறை உதவியுடன் எங்களை விரட்ட முயன்று வருகிறது. காவல்துறையும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கண்ணிர் குண்டுகளை வீசி விரட்டுகிறது. இவ்வாறு எங்கள் வாழ்வாதாரத்தை இழப்பதை விட நாங்கள் மரணமடைய விரும்புகிறோம். விருப்பத்துடன் மரணம் என்னும் சட்டப்படி எங்களுக்கு மரணம் அடைய அனுமதி அளிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு மனு அளிக்கப்பட்டுள்ளதை பாவ்நகர் ஆட்சியாளர் உறுதி செய்துள்ளார். இது குறித்து விவசாயிகளின் தலைவர், “எங்கள் நிலங்களை பிடுங்க முயலும் இந்த அரசு எங்களை தீவிரவாதிகள் போல நடத்துகிறது. விரைவில் ராணுவத்தை அனுப்பி எங்களை கொல்லவும் முயலும் என அஞ்சுகிறோம். அவ்வாறு ராணுவத்தின் கையால் இறந்து தீவிரவாதிகள் என பெயர் வாங்குவதை விட நாங்களே எங்களின் உயிரை மாய்த்துக்கொள்ள தீர்மானித்துள்ளோம்” எனக் கூறினார்.