பெங்களுரு:   

மே 1-ந் தேதி முதல் கர்நாடகாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி நடக்க இருக்கிறது.  இதையடுத்து வேட்புமனு தாக்கல் கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. முதல்வர்  சித்தராமையா, கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, ஜனதா தளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் குமாரசாமி உள்பட முக்கிய தலைவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது. கருத்து கணிப்பு முடிவுகள் யாருக்கும் சாதகமாக இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும், தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் தனது தேர்தல் பிரசாரத்தினை மே 1-ந் தேதி முதல் பிரதமர் மோடி துவக்க இருக்கிறார்.

மே 1-ந் தேதி முதல் மே 9-ந் தேதி வரை அங்கு மோடி பிரசாரம் செய்ய இருக்கிறார்.

 

மே 1-ந் தேதி உடுப்பி, சாம்ராஜ் நகர் மற்றும் பெலகாவியில் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மூன்று மாவட்டங்களில் ஒவ்வொரு நாளும் மூன்று இடங்களில் பிரசாரம் செய்ய இருக்கிறார்கள்.  மாநிலத்தின் 15 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தினை செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.க வட்டாரம் தெரிவிக்கிறது.