பெங்களூரு:
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டி பிரபல நடிகரும், காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான அம்பரிஷ் போட்டியிட திடீர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கர்நாடக காங்கிரசில் பரபரப்பு நிலவி வருகிறது.
வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாளாக இருப்பதால், அவருக்கு பதிலாக வேறு ஒருவரை களமிறக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் கடந்த 15-ந்தேதியே வெளியிடப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாக உள்ள நிலையில், மாண்டியா தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகர் அம்பரீஷ் வேட்புமனு தாக்கல் செய்வதை தவிர்த்துள்ளார்.
வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் இருந்து ஒதுங்கி தனது அதிருப்தியை தெரிவித்து வந்த அம்பரிஷ், முதல்வர் சித்தராமையா அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்ட போதும் அவர் பேச மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக இருக்கும் வேளையில், மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட போவதில்லை என்று அம்பரிஷ் அறிவித்துள்ளார்.
இந்த தகவலை அவர் தனது நண்பர் அமராவதி சந்திரசேகர் மூலம் சித்தராமையாவுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இது கர்நாடக காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் அம்பரிசுக்கு மாண்டியா, மைசூரு, ஹசன், தும்கூர் மாவட்டங்களில் மிகுந்த செல்வாக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சித்தராமையா மீதுள்ள அதிருப்தி காரணமாக அவர் போட்டியிட மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட அம்பரிசின் நண்பர் சந்திரசேகர் முயற்சி செய்து வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா அதை விரும்பாமல் மாண்டியா மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆத்மானந்தாவை களம் இறக்க திட்டமிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.